
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் ஸ்டேபிளி தெருவில் வசித்து வரும் ஜேம்ஸ் என்பவரின் மகள் பெர்சியா. இவர், நாலுமாவடியிலுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார் . இரு நாட்களுக்கு முன்பு வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்ற போது எதிரே பைக்கில் வந்த மர்ம நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆசிரியையின் கழுத்தில் கிடந்த தங்க நகையை பறிக்க முயற்சித்துள்ளார். உடனே, ஆசிரியை சத்தம் போடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். இதையடுத்து , பைக்கில் வந்த மர்ம நபர் மின்னல் வேகத்தில் பைக்கில் தப்பி சென்று விட்டார்.
இதுகுறித்து , ஆசிரியை நாசரேத் போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த நாசரேத் இன்ஸ்பெக்டர் கங்கை நாத பாண்டியன் சம்பவ இடத்துக்கு சென்றுபார்வையிட்டு விசாரணை நடத்தினர். அருகில் உள்ள வீடுகளில் சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.
இந்தநிலையில் நேற்று (மார்ச் 22 )மாலை நாசரேத் பகுதியில் இன்ஸ்பெக்டர் கங்கைய நாத பாண்டியன் தலைமையில் சிறப்பு இன்ஸ்பெக்டர் ஐசக் மகாராஜா மற்றும் காவலர் ஜெகநாதன் உள்ளிட்ட போலீசார் தீவிரமாக வாகன சோதனை நடத்தி வந்தனர். இந்த சமயத்தில் வேகமாக வந்த ஒரு பைக்கை நிறுத்தி சோதனையிட்டனர்.
பைக்கை ஓட்டி வந்த இளைஞர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். தொடர்ந்து, அவரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையின் போது ஆசிரியையிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் என்பது தெரிய வந்தது. பிடிபட்டவரின் பெயர் அசோக் என்பதும் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள அடைக்கலாபுரத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து, அவரின் பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.