தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்திலுள்ள மர்காஷிஸ் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை சாரா ஞானபாய் தலைமை வகித்தார். திருச்செந்தூர் கல்வி மாவட்ட சாரணர் இயக்க செயலாளர் சிவகுமார், நாசரேத் காவல் நிலைய தலைமை காவலர் அம்சுராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் வரவேற்றார்.நாசரேத் காவல் நிலைய காவலர் சாமுவேல்ராஜ் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், தனியார் பள்ளி நிர்வாக அலுவலர் கண்ணபிரான் போதை பழக்கம் மாபெரும் தீங்கு விளைவிக்கும் என்பதால் போதையில்லா பாதையை மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் எடுத்துரைத்தனர். இதையடுத்து போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி வாசிக்கப்பட்டது. மாணவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் எழுந்து நின்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
போதைப்பொருட்களின் உற்பத்தி, நுகர்வு மற்றும் பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிராக மாணவர்கள் செயல்பட வேண்டும் என்று நிகழ்ச்சியில் அறிவுறுத்தப்பட்டது. பின்னர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தின் சார்பில் வழங்கப்பட்ட போதை ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகள் பள்ளியின் முக்கிய இடங்களில் மாணவர்கள் பார்வைக்காக ஒட்டப்பட்டன. நிகழ்ச்சியில் நாசரேத் காவல் நிலைய காவலர் குணசுந்தர், ஆசிரியர்கள் பட்டுராஜன், கிறிஸ்டோபர் லிவிங்ஸ்டன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.










