கயத்தாறு பெட்ரோல் பங்க் மேலாளர் கொலை: கொலையாளிகள் பிடிபட்டது எப்படி?

gayatharu-petrol-pump-manager-murder-how-were-the-killers-caught

கயத்தாறு அருகே பெட்ரோல் பங்க் மேலாளர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த 2 பேரை துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர்.


தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகே உள்ள காப்புலிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்லையா என்பவரின் மகன் சங்கிலி பாண்டி (29). இவர் கடம்பூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் வழக்கம்போல தனது பைக்கில் சங்கிலி பாண்டி வேலைக்கு சென்றுள்ளார்.

நேற்று (ஏப்ரல் 1)கயத்தாரில் இருந்து கடம்பூர் செல்லும் சாலையில் சங்கிலி பாண்டி சென்ற பைக் விபத்துக்குள்ளாகி உயிரிழந்து கிடப்பதாகவும், அருகில் ஆளில்லாத கார் ஒன்றும் இருப்பதாகவும் கயத்தார் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் சுகாதேவி தலைமையில் போலீசார் விரைந்து சென்று சங்கிலி பாண்டி உடல் மற்றும் காரை மீட்டனர். சங்கிலி பாண்டி உடல் பகுதியில் அரிவாள் வெட்டு காயங்கள் இருந்ததால் நடந்தது விபத்து கிடையாது சங்கிலி பாண்டி வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சங்கிலி பாண்டி உடலை உடற்கூறு ஆய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொலை செய்தவர்கள் காரை விட்டுச் சென்றதால் காரின் உரிமையாளர் குறித்து போலீசார் விசாரணை தொடங்கினர்.


அப்போது, காட்டுப் பகுதியில் கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன், கயத்தார் காவல் நிலைய ஆய்வாளர் சுகாதேவி மற்றும் தனிப்படை பிரிவு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் மூன்று பிரிவுகளாக குற்றவாளிகளை தேட தொடங்கினர். இந்த சமயத்தில், காட்டுப்பகுதியின் மையப் பகுதியில் நின்று கொண்டிருந்த இரண்டு பேர் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசாரை பார்த்ததும், தங்கள் கையில் வைத்திருந்த அரிவாள்களை போலீசார் மீது வீசினார்.

போலீசார் விலகி கொண்டதால், தப்பித்தனர். தொடர்ந்து போலீசார் அவர்களை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தியதில் காப்பிலிங்கம் பட்டியை சேர்ந்த சண்முகராஜ் மற்றும் மகாராஜன் என்பது தெரியவந்தது.பின்னர், போலீசார் இருவரையும் கைது செய்து கயத்தாறு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

கைது செய்யப்பட்டுள்ள சண்முகராஜ் மனைவி கடந்த ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கொலை செய்யப்பட்ட சங்கிலி பாண்டிக்கும்,, சண்முகராஜ் மனைவிக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இது வெளியே தெரிய வந்ததால் அவர் அவமானம் தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


தன்னுடைய மனைவி தற்கொலை செய்து கொள்ள சங்கிலி பாண்டி தான் காரணம் என்று கருதிய ண்முகராஜ் அவ்வப்போது சங்கிலி பாண்டியை திட்டி வந்துள்ளார். இதனால், அவர்தான் திட்டமிட்டு கொலை செய்திருக்கிறார்.

காரை ஏற்றி கொலை செய்துவிட்டு விபத்து போல் ஜோடித்துவிடலாம் என்று நினைத்த நிலையில் படுகாயத்துடன் சங்கிலி பாண்டி தப்பித்து விட்டார். இதனால், காரை விட்டு கீழே இறங்கி அரிவாளால் வெட்டி கொலை செய்தததாக போலீசார் கூறுகின்றனர்.