
இயேசு யூதர்களின் பஸ்கா பண்டிகை நாளன்று பண்டிகை கொண்டாட கழுதையில் ஜெருசலேம் வரும் போது மக்கள் வழிநெடுகிலும் ஒலிவ மலை குருத்து இலைகளை விரித்தனர். அவருடன் முன் நடப்பவரும் பின் நடப்பவரும் தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். இந்த நாளை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் வருடம் தோறும் குருத்தோலை ஞாயிறாக அனுசரிக்கின்றனர்.
இதையொட்டி நேற்று(ஏப்ரல் 13) தூத்துக்குடி நாசரேத் டையோசிஸ் ஒய்யாங்குடி சி.எஸ்.ஐ திருச்சபையில் குருத்தோலை பவனி நடைபெற்றது. ஆலயத்திலிருந்து பவனி தொடங்கி ஊரை சுற்றி ஓசன்னா பாடல்களை பாடி கையில் குருத்தோலைகளை ஏந்தியபடி சென்றனர். இதன் பின்னர் ஆலயத்தில் ஆராதனை நடை பெற்றது. குருவானவர் ரூபன் மணிராஜ் ஜெபம் செய்தார். சபை ஊழியர் இம்மானுவேல் தேவசெய்தி அளித்தார். சபை இளைஞர்கள், பெண்கள் ஆலயத்தை குருத்தோலைகளால் அலங்கரித்திருந்தனர்.
மேலும் இப்பகுதியில் எங்கும் இல்லாத வகையில் ஒய்யான்குடி ஆலயத்தினர் பாரம்பரியமாக அதாவது அறுபது ஆண்டுகளுக்கு மேலாக வருடந்தோறும் லெந்து காலங்களில் சாம்பர் புதன் தொடங்கி குருத்தோலை ஞாயிறு வரை 40 நாட்களும் ஊர் மக்கள் திரளாக அதிகாலை நான்கு மணிக்கு பவனியாக ஊரை சுற்றி ஜெபித்து வருகிறார்கள் என்பது இந்த ஊரின் தனிச்சிறப்பு