சாத்தான்குளம் : நகைகளை கொள்ளையடிக்க போலீசின் தாயாரை கொன்ற இளம்பெண் கைது

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகத்தில் காவலராக பணிபுரிபவர் விக்ராந்த். இவரது வீடு ஆனந்தபுரம் அருகே உள்ள தேரிப்பனையில் உள்ளது. அங்கு இன்று இரவு அவரது தாயார் வசந்தா (60) வீட்டில் இருந்த நிலையில் யாரோ வீடு புகுந்து அவரை வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரித்து வந்தனர். இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த 22 வயதான செல்வரதி என்ற இளம் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர், வசந்தா அணிந்திருந்த நகைகளை கொள்ளையடிப்பதற்காக அவரை வெட்டிக் கொன்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, செல்வரதியிடம் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தது. செல்வரதிக்கு சொந்த ஊர் தேரிப்பனை. ஈசாக் என்பவருடன் திருமணம் ஆகி மீரான் குளத்தில் வசித்து வந்தார். இவருக்கு திருட்டு பழக்கம் இருந்துள்ளது. தன் வீட்டு அருகிலேயே ஒரு சில வீடுகளில் திருடியுள்ளார்.

இந்த நிலையில், நேற்றிரவு வந்தாவின் வீட்டுக்கு செல்வரதி வந்துள்ளார். அப்போது, அவர் இங்கு ஏன் வந்தாய் என்று கேட்டுள்ளார். இதனால், கோபமடைந்த அவர் அருகில் கிடந்த அரிவாளை எடுத்து வசந்தாவை வெட்டி கொலை செய்து, காதில், கழுத்தில் கிடந்த நகைகளை திருடியது தெரிய வந்தது.