
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி- பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் ஜி.பி.முத்து . இவர், டிக் டாக் பிரபலம். இவரது வீட்டருகே உச்சினிமாகாளி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் தற்போது கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இது தொடர்பாக ஜி.பி முத்துவுக்கும் கிராம மக்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்துதூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் ஜி.பி.முத்து புகார் அளித்திருந்தார். அதில், "கோயில் கட்டுமானப் பணிகளால் 15 அடி அகலம் கொண்ட தெருவின் அகலம் 8 அடியாகக் குறைந்துள்ளது. இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது" எனக்கூறி, கடந்த 12-ம் தேதி, "பெருமாள்புரத்தில் உள்ள கீழத்தெருவைக் காணவில்லை, வருவாய்த்துறையினர் முறையாக நில அளவை செய்து ஆக்கிரமிப்பிலிருந்து அந்த இடத்தை மீட்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இதற்கிடையே, ஜி.பி.முத்து ஊர் மக்களையும், அம்மனையும் அவதூறாகப் பேசியதாகக் கூறி ஊர்மக்கள் சேர்ந்து ஜி.பி.முத்துவின் வீட்டை முற்றுகையிட்டனர். இதையடுத்து, குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீஸார், ஜி.பி.முத்துவின் வீட்டுக்கு பாதுகாப்பு அளித்தனர். இன்று( மே 14) நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோயில் முன்பு குவிந்தனர்.
அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த சமயத்தில், வீட்டிலிருந்து ஜி.பி.முத்து வெளியே வந்தார். அப்போது,
அவருக்கும் கிராம மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கிராம மக்கள் ”ஜி.பி.முத்து ஒழிக” என கத்தினர்.
பதிலுக்கு, “ஜி.பி.முத்து ஒழிக” என, தனக்குத்தானே கோஷமிட்டுக் கொண்டார்.
இது குறித்து பேசிய மக்கள் , நான்கு தலைமுறைகளாக வழிபட்டு வரப்படும் கோயில் இது. ஜி.பி.முத்து விளம்பரத்திற்காக இதுபோன்ற செயலில் ஈடுபடுகிறார். கோயில் ஏற்கனவே இருந்த இடத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஜி.பி. முத்து சொல்வது முற்றிலும் பொய்'
என்கின்றனர்.
ஜி.பி.முத்து கூறுகையில், பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எங்களை ஒதுக்குகிறார்கள். கோயில் இடத்திலும் கீழத்தெருவையும் ஆக்கிரமித்து சிலர் வீடுகள் கட்டி இருக்கின்றனர்.ஆக்கிரமிப்பினை மீட்காவிட்டால் எனது நான்கு குழந்தைகளுடன் தீக்குளிப்பேன்” என்கிறார்.