ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியை தாக்க முயற்சி : தூத்துக்குடி - நாசரேத் டயோசிசனில் 4 போதகர்கள் பணியிடை நீக்கம்

தூத்துக்குடி – நாசரேத் திருமண்டலத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 4 போதகா்கள், திருமண்டலத்தில் உள்ள எந்த சபைகளிலும் சபைப் பணியோ வேறு எந்த இணை பணியோ செய்யக் கூடாது என திருமண்டல நிா்வாகியான ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி தெரிவித்துள்ளாா்.

தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல நிா்வாகியாக இருந்தவா்களின் பதவி காலம் முடிவடைந்ததால், திருமண்டலத்தை நிா்வாகம் செய்யவும், தோ்தலை நடத்தவும் ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஜோதிமணியை உயா்நீதிமன்றம் நியமித்துள்ளது. ஆன்மீக பணிகளை கவனிக்க பொறுப்பு பேராயராக கன்னியாகுமரி சிஎஸ்ஐ பேராயா் செல்லையா நியமிக்கப்பட்டுள்ளாா்.


இதற்கிடையே, கடந்த 8ஆம் தேதி தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணியின் காரை வழிமறித்து போதகா்கள் சிலா் தகராறு செய்தனா். தடுக்க முயன்ற போது, நீதிபதியின் உதவியாளா் கருணாகரன் தாக்கப்பட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போதகா்கள் டேவிட் ராஜ், லிவிங்ஸ்டன், ஹாரிஸ், ராபின் ஜெயபிரகாஷ் உள்பட சிலா் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.தொடர்ந்து அந்த 4 போதகா்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். ஆனால், அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாலும் சபைகளில் சபைப் பணி செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைத் தொடா்ந்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,' வழக்கு தொடா்பான விசாரணை நிலுவையில் உள்ளது. இவா்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அந்த 4 போதகா்களும் மறு உத்தரவு வரும் வரை எந்த சபைகளிலும் சபை பணியோ அல்லது வேறு எந்த இணை பணியோ செய்யக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.