தூத்துக்குடியில் நெய்தல் விழா : கனி மொழி எம்.பி. பங்கேற்பால் கலைஞர்கள் உற்சாகம்

neithal-function-startedin-tuticorin

தூத்துக்குடியில் நெய்தல் கலைத் திருவிழாவை இன்று( ஜூன் 13) கனிமொழி எம்பி மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தனர்

தமிழர்களின் பண்பாடு, கலை, நாகரிகம் போன்றவற்றைப் பறைசாற்றும் வகையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி முயற்சியில்தூத்துக்குடியில் நெய்தல் கலைத் திருவிழா தொடங்கியுள்ளது . தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இந்த நெய்தல் கலை விழா வருகிற 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவை திமுக துணை பொதுச் செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், ஆணையர் மதுபாலன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 300க்கும் மேற்பட்ட பாரம்பரிய கலைஞர்கள், தங்களது திறமைகளை வெளிப்படுத்தவுள்ளனர். கரகாட்டம், மயிலாட்டம்,ஒயிலாட்டம், தேவராட்டம்,பறையாட்டம், குச்சியாட்டம், துடும்பாட்டம், ஜிம்பளா மேளம், பொய்க்கால் குதிரை, கிராமிய நிகழ்ச்சி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது

முதல் நாளான நேற்று தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளி குழுவினரின் மங்கல இசை, சமர் கலைக்குழு, அபிநயா நிருத்தாலய நடன பள்ளியின் பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நெய்தல் திருவிழாவின் ஒரு பகுதியாகத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த பாரம்பரிய உணவு வகைகளை அறிந்து கொள்ளும் வகையில், உணவு கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.