தூத்துக்குடி மக்களின் இரவு நேர ஒரே நம்பிக்கை... அதையும் முறையாக பராமரிக்காமல் போனால் எப்படி?

muthunagar-express-delayed-due-toengine-coach-connector-repairs

முத்து நகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இஞ்சினுடன் ரயில் பெட்டியை இணைப்பதில் ஏற்பட்ட பழுது காரணமாக சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு சென்றது.

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு இரவு நேரத்தில் ஒரே ஒரு ரயில்தான் இயக்கப்படுகிறது. அது, முத்துநகர் எக்ஸ்பிரஸ். தூத்துக்குடியில் இருந்து இரவு 8.40 மணிக்கு சென்னைக்கு புறப்படும். நேற்றிரவு தூத்துக்குடியில் இருந்து புறப்பட ரயில் பிளாட்பாரத்துக்கு வந்தது. அப்போது, ரயிலை இன்ஜீனுடன் இணைக்கும் பகுதியில் பழுது இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது இதன் காரணமாக ரயில் கிளம்புவதில் தாமதம் ஏற்பட்டது

இதைத்தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் அரை மணி நேரத்திற்கு மேலாக பழுதை நீக்கும் பணியில் ஈடுபட்டனர் . பின்னர், பழுது சரி செய்யப்பட்டு சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக தூத்துக்குடி ரயில் நிலையத்திலிருந்து முத்துநகர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்றது. இதன் காரணமாக ரயில் பயணிகள் அவதியடைந்தனர்.

ஒரு மணி நேரம் தாமதமாக முத்துநகர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டதால், பல ரயில் நிலையங்களில் பயணிகளும் காத்து கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தொடர்ந்து, இன்று (ஜூன்29) காலை 7 மணிக்கு, அதாவது ஒரு மணி நேரம் தாமதமாக சென்னை எழும்பூரை முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றடைந்தது. அதே நேரத்தில், சரியான நேரத்தில் பழுது கண்டறியப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக ரயில்வே ஊழியர்கள் கூறுகின்றனர்.

ரயில் இன்ஜினுடன் பயணிகள் பெட்டியை இணைக்கும் பகுதியில் பழுது ஏற்பட்டது ஏன்? முதல் நாள் இரவு சோதனையின் போது, சரியாக இருந்த நிலையில் எப்படி இந்த கோளாறு ஏற்பாட்டிருக்கும்? என்கிற கோணத்தில் அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

தூத்துக்குடி மக்களின் செல்ல பிள்ளை போல பார்க்கப்படும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலை முறையாக பராமரித்து இயக்க வேண்டுமென்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.