சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை... நீலிக்கண்ணீர் வடித்த கனிமாழி- சி.த. செல்லபாண்டியன் கடும் தாக்கு

satankulam-father-son-murdered-now-where-is-kanimazhi-chellapandiyan-severely-attacks

திமுக அரசின் 25வது லாக்கப் மரணமான திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமாரின் மரணத்திற்கு நீதி கேட்டு அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சி.த. செல்ல பாண்டியன் தலைமையில் அதிமுகவினர், "JUSTICE FOR AJITH KUMAR" என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சி.த செல்லபாண்டியன் கூறுகையில், 'கடந்த ஜூன் 27ஆம் தேதி, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில், மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் பாதுகாப்பு காவலராக பணியாற்றியவர் அஜித்குமார் (27). இவர், திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தார்.அஜித்குமாரின் உடலில் 18 இடங்களில் காயங்கள் ஏற்பட்டதாகவும், அதில் 15 வெளிப்புற காயங்கள், 3 உள்புற காயங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

நீதிபதிகள் நேரடி விசாரணை நடத்தியதில் தாக்குதல் நடைபெற்றதற்கான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த சம்பவத்துக்கு போலீஸ் துறையை நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது. இது, திமுக ஆட்சியில் நிகழும் 25ஆவது லாக்-அப் மரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், திமுக கூட்டணிக் கட்சிகளோ, சமூக அமைப்புகளோ எதுவும் இதுகுறித்து போராடவும் இல்லை. நீதி கேட்கவும் இல்லை.

சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் மரணத்தின் போது நீலிக் கண்ணீர் வடித்த திமுக எம்.பி. கனிமொழி உள்பட அக்கட்சி நிர்வாகிகள், சமூக அமைப்புகள், சினிமா நடிகர்கள் எல்லாம் எங்கே போய்விட்டார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நாங்கள் நீதி கேட்கிறோம்.காவல் துறையின் அமைச்சரும், முதல் அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இந்த கொலைக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.