தூத்துக்குடியில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களை கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களை கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பில், மறியல் போராட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி அரசு ஊழியர் சங்கத்திலிருந்து ஊர்வலமாக சென்று அம்பேத்கர் சிலை முன்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலை உடையார் தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, தமிழ்நாடு அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளை நீக்கி மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும்.ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பினைப் பறிக்கும் அரசாணை 243ஐ முற்றிலும் ரத்து செய்திட வேண்டும்.உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை ஆசிரியர்களுக்கு உடனடியாக மீண்டும் வழங்கிட வேண்டும் என்றும் அவர்கள் கோஷமிட்டனர். மறியலில் ஈடுபட்ட 200 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.










