சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.
சாத்தான்குளம் ஜெயராஜ் -பென்னிக்ஸ் மரணம் கடந்த ஜூன் 2020 நடந்த நிலையில் இன்னும் நீதி கிடைக்காத சூழலில் திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் மரணம் அரங்கேறி உள்ளது. ஆட்சிகள் தான் மாறி உள்ளதே தவிர காட்சிகள் மாறவில்லை என்பதை காட்டுகின்றன. மேலும் இங்கு சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை, போலீஸ் ராஜ்ஜியமே நடக்கிறது என்பதை நடைபெறும் சம்பவங்கள் நிரூபித்து வருகிறது. ஒருவரை கைது செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய 11 விதிமுறைகளை உச்சநீதிமன்றம் வகுத்துள்ளது. ஆனால் இவை எதையுமே காவல்துறை பின்பற்றுவது இல்லை.
விசாரணை என்ற பெயரில் பற்களை பிடுங்குவது, பல்வேறு சித்ரவதைகளை மேற்கொள்வது, உயிரை பறிப்பது என காவல்துறை மனித உரிமை மீறல் துறையாகவே மாறிப்போனது. இதில் பெரும்பாலும் போலீசாரின் சித்ரவதைக்கு இலக்கு ஆகின்றவர்கள் தினக்கூலிகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், குடிசைவாசிகள், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் விளிம்பு நிலையில் வாழ்வோரே. சமூகத்தில் பலவீனமான நிலையில் வாழும் மனிதர்களை சட்டம் பாதுகாக்க வேண்டும். மாறாக அவர்களை சித்ரவதை செய்யக்கூடாது. இத்தகைய செயல்கள் நமது ஜனநாயக விரோதப்போக்கையும், அதிகார அத்துமீறலையுமே காட்டுகிறது.
தேசிய குற்றவியல் ஆவணக்காப்பக அறிக்கையின்படி அதிக அளவில் காவல் மரணங்கள் நடக்ககூடிய மாநிலங்களின் முன்வரிசையில் தமிழ்நாடும் உள்ளது. தேசிய மனித உரிமை ஆணையத்தின் தரவுகளின்படி தமிழ்நாட்டில் 2018 - 19 ஆண்டில் 11 காவல் மரணங்களும், 89 சிறை மரணங்களும் பதிவாகி உள்ளது. 2019-20 ல் 12 காவல் மரணங்களும், 57 சிறை மரணங்களும் 2021-25 ல் 24 காவல் மரணங்களும், 16 என்கவுண்டர் மரணங்களும் பதிவாகி உள்ளது.
பெரும்பாலான வழக்குகளில் குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்யாத நிலை உள்ளது. அதிலும் காவல் மரணங்களுக்கு போலீசார் தண்டிக்கப்படுவது அரிதினும் அரிதாக நடக்கிறது.
காவல் குற்றங்கள் தொடர்கதையாக நடைபெறும் நிலையில் அவற்றுக்கு உரிய தண்டனையும் அளிக்கப்படுவதில்லை என்கிறபோது அரசு என்னும் அமைப்பும் அதற்கு பொறுப்பாளி ஆகவேண்டும். சந்தேகத்தின் பேரில் விசாரணை என்கிற அதிகார அத்துமீறல்களால் நாம் பலரை தொடர்ந்து நாம் இழந்து கொண்டு இருக்கின்றோம்.
இச்சூழலில் காவல்துறை சித்ரவதைகளுக்கு எதிராக ஒருமித்த குரல் கொடுக்க வேண்டியது கட்டாய தேவையாகும். கடந்த 1997 ல் சித்ரவதைகளுக்கு எதிரான ஐ.நா உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்து இட்டது. 2010ல் மக்களவையில் மட்டுமே அதற்கான சட்டமுன்வரைவு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
உச்சநீதிமன்றம் வலியுறுத்தி சட்டமுன்வரைவை சட்ட ஆணையம் சமர்பித்த நிலையிலும் இதுவரையில் நாடாளுமன்றத்தில் இதற்கான சட்டம் இயற்றப்படாத நிலையே உள்ளது. உயிர்வாழ்வதற்கான அடிப்படை உரிமையினையே சித்ரவதை கேள்விக்குறி ஆக்கி உள்ளதால் இத்தகைய கொடுமைகளை தடுத்திடவும், மனித உரிமை மீறல்கள் நிகழாமல் காத்திடவும் நாட்டிற்கே முன்மாதிரியாகவும், காவல் மரணங்கள் இல்லாத நிலை தமிழகத்தில் ஏற்படும் வகையில் தமிழக அரசு சித்ரவதைகளுக்கு எதிரான சிறப்பு சட்டத்தை இயற்றிட வேண்டும்.
என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.










