தூத்துக்குடி: பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 7:50 மணிக்கு மாலத்தீவில் இருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி வந்தடைந்தார்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக ஆளுனர் ஆர்.என். ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு அளித்தனர்.
பிரதமர் மோடி பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக தலைவர்கள் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோரும், தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், டி.ஆர்.பி ராஜா, அனிதா ராதா கிருஷ்ணன், தி.மு.க நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
தொடர்ந்து, ரூ. 452 கோடி செலவில் விரிவாக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை அவர் திறந்து வைத்தார். பின்னர், இரவு 8:10 மணியளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ. 4900 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டப் பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இதில், ரயில்வே துறையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் ரூ.1,030 கோடி மதிப்பிலான பணிகள், நெடுஞ்சாலைத்துறையில் முடிக்கப்பட்டுள்ள ரூ.2,571 கோடி மதிப்பிலான பணிகள், ரூ.548 கோடி மதிப்பீட்டில் கூடங்குளம் நிலையத்தில் 3 மற்றும் 4-வது பிரிவில் மின்சாரத்தை வெளியேற்றுவதற்காக உள்ள மின் பரிமாற்ற அமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் ஆகியவை அடங்கும்.
பிரதமர் மோடி நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு கடந்த 23-ஆம் தேதி புறப்பட்டுச் சென்றார். இங்கிலாந்தில் வர்த்தகம் தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்கள் பிரதமர் முன்னிலையில் கையெழுத்தாகின. பின்பு மாலத்தீவில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று தமிழகம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.










