4900 கோடி மதிப்பிலான திட்டங்கள் அர்ப்பணிப்பு - தூத்துக்குடியில் பிரதமர் மோடி பெருமிதம்!

4900-crores-worth-of-projects-dedicated-pm-modi-proud-in-thoothukudi

தூத்துக்குடி: ஜூலை 26, தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் விமான நிலையத்தின் விரிவாக்கப்பட்ட புதிய முனையத்தை மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, ரூ. 4900 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் தொடங்கி வைத்தார்.

தனி விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை, பாரதிய ஜனதா கட்சியினர், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் முக்கிய அதிகாரிகள் வரவேற்றனர்.

"தமிழர்கள் பல நூற்றாண்டுகளாக சக்தி வாய்ந்த பங்களிப்பை அளித்துள்ளனர்!":

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "தூத்துக்குடி மாவட்டமும், தமிழக மக்களும் பல நூற்றாண்டுகளாக சக்தி வாய்ந்த தங்களது பங்களிப்பை அளித்துள்ளனர். இந்த மண்ணில்தான் வ.உ.சிதம்பரம் பிள்ளை போன்ற தேசபக்தர்கள் தோன்றினார்கள். அடிமை காலத்தில் கூட சுதந்திரத்தின் சக்தியைப் புரிந்துகொண்டு, சுதேசி கப்பலைச் செலுத்தி ஆங்கிலேயர்களுக்கு சவால் விடுத்தவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை" என்று புகழாரம் சூட்டினார்.

மேலும், "இந்த மண்ணில்தான் வீரபாண்டி கட்டபொம்மன், அழகுமுத்துக்கோன் போன்ற மாமனிதர்கள் சுதந்திரத்திற்காக தங்கள் கடமைகளைச் செய்தார்கள். சுப்பிரமணிய பாரதி போன்ற தேசியக் கவிஞர் கூட இங்கே அருகேதான் பிறந்துள்ளார். சுப்பிரமணிய பாரதிக்கு எந்த மாதிரியான பலமான உறவு இருந்ததோ, எனது நாடாளுமன்றத் தொகுதியான காசிக்கும் உள்ளது. காசி தமிழ்ச் சங்கம் மூலமாக அந்த உறவுகளைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்" என்று குறிப்பிட்டார்.

வளர்ச்சியடைந்த தமிழகம், வளர்ச்சியடைந்த பாரதம்: பிரதமரின் தொலைநோக்குப் பார்வை:

"இந்த முயற்சிகளின் காரணமாக, வளர்ச்சியடைந்த தமிழ்நாடு, வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குடன் நாம் முன்னேறிச் கொண்டிருக்கிறோம். இந்தியாவில் தொழில் துறை பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. இன்று இந்தியாவின் வளர்ச்சியில் உலக அளவில் அறியப்படும் வளர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதிய ஒப்பந்தங்கள் மூலமாக இந்தியாவிற்கு ஒரு புதிய அத்தியாயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறி வருகிறது. இந்த வேகம் மேலும் அதிகரிக்கும்" என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியா - பிரிட்டன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் பலன்கள் இந்தியா மற்றும் பிரிட்டன் இடையே கையெழுத்தான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தைப் பற்றிப் பேசிய பிரதமர்,

"இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, பிரிட்டனில் விற்பனையாகும் 99% இந்தியப் பொருட்களுக்கு எந்தவித வரியும் விதிக்கப்படாது. இதனால், பிரிட்டனில் இந்தியப் பொருட்கள் மலிவாகக் கிடைக்கும், தேவையும் அதிகரிக்கும். அதே சமயம், இந்தியாவிலும் பொருட்களை உற்பத்தி செய்ய அதிக வாய்ப்புகள் உருவாகும்" என்று தெரிவித்தார்.

"இந்தியா பல நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. நமது சிறு, குறு, மற்றும் நடுத்தரத் தொழில்முனைவோருக்கு நல்ல ஆதாயத்தை ஏற்படுத்துகிறோம். இதனால், தொழில் துறை, மீனவர்கள், ஆய்வாளர்கள் என அனைவருக்கும் ஆதாயங்கள் கிடைக்கும்" என்றார் அவர்.

'மேக் இன் இந்தியா' மற்றும் தற்காப்புத் துறையில் இந்தியாவின் வலிமை:

'மேக் இன் இந்தியா' திட்டத்திற்கு இந்திய அரசு அதிக வலு சேர்த்துள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர், "ஆபரேஷன் சிந்து போன்ற ராணுவ நடவடிக்கைகளில் இந்தியாவின் பலத்தை நீங்கள் கண்கூடாகப் பார்த்திருப்பீர்கள். பயங்கரவாதிகள் பதுங்கி இருந்தவர்கள் மண்ணோடு மண்ணாகியது. இதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் பெரும் பங்களிப்பு இருந்தது. நம் நாட்டில் தயாரிக்கப்படும் ஆயுதங்கள் இன்று கூட பயங்கரவாதத்தை ஆதரித்தவர்களை நிலைகுலையச் செய்துள்ளது" என்று பெருமிதம் தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்கட்டமைப்பு மேம்பாடு: மத்திய அரசின் பங்களிப்பு:

"நமது தமிழ்நாட்டின் ஆற்றல் வளத்தை முழுமையாகப் பயன்படுத்த, தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டிற்கு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறோம். விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து வருகிறோம்" என்றார் பிரதமர் மோடி.

தூத்துக்குடி விமான நிலையத்தைப் பற்றிப் பேசிய அவர்,

"தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிதாக மேம்படுத்தப்பட்ட இந்த முனையம் ஒரு பெரிய முன்னெடுப்பாகும். 450 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த முனையம், தற்போது ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சத்திற்கும் அதிகமான பயணிகளைக் கையாளும் திறனைக் கொண்டுள்ளது.

முன்னதாக, இந்த விமான நிலையம் ஆண்டுக்கு வெறும் 3 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன் மட்டுமே கொண்டிருந்தது. இந்த புதிய முனையம் தொடங்கப்பட்ட பிறகு, நாட்டின் தூத்துக்குடி இணைப்பு அதிகரிக்கும். இங்குள்ள வியாபாரம் மற்றும் தொழிலுக்கு ஊக்கம் கிடைக்கும். தமிழ்நாட்டில் பெரு நிறுவனங்கள் பயன்பெறும். கல்வி மையங்கள் ஆதாயங்கள் பெறும். மேலும், சுற்றுலாத் தலத்திற்கான சாத்தியக்கூறுகள் இங்கு அதிகரிக்கும்" என்று குறிப்பிட்டார்.

சாலைகள், ரயில்வே, கடல் பாலங்கள்: தமிழகத்தின் வளர்ச்சியில் மத்திய அரசின் பங்கு:

"தமிழ்நாட்டில் இன்று இரண்டு முக்கிய சாலைகள் இணைக்கப்பட்டுள்ளன. இது டெல்டா மாவட்டங்களை சென்னையோடு இணைக்கும் ஆற்றலைக் கொடுக்கும். இந்தத் திட்டங்களின் உதவியால் தூத்துக்குடி துறைமுகம் மேலும் சிறப்பானதாக மாறியுள்ளது. இந்தப் பகுதியில் எளிதாக வாழக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்புக்கு புதிய பாதைகள் திறக்கும்" என்று பிரதமர் கூறினார்.

"நமது அரசு தேசத்தின் ரயில்வே துறை மற்றும் தொழில்துறை வளர்ச்சியை உயிர் நாடியாகக் கருதுகிறது. இதனால்தான் ரயில்வே துறை வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் ரயில்வே துறை வளர்ச்சியின் மையமாக தமிழகம் உள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு புதிய அனுபவம் கிடைத்துள்ளது. நாட்டின் முதல் மற்றும் தனித்தன்மை வாய்ந்த ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலம் தமிழகத்தில் மட்டும்தான் உருவாக்கப்பட்டுள்ளது. பாம்பன் பாலத்தால் வியாபாரம் செய்வதில் எளிமையும், பயணத்திற்கான எளிமையும் அதிகரித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் உருவாக்கப்பட்டுள்ள மிகப்பெரிய பாலமும் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரோடு முதன்முதலாக இணைக்கப்பட்டுள்ளது" என்றார்.

"இவற்றைத் தவிர, நாட்டின் மிக அதிகமான நீளமான கடல் பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. இது தேசிய ஜனநாயகக் கூட்டணி மூலமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக இந்தியாவில் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில் கடந்த 11 ஆண்டுகளில் 11 மருத்துவமனைகள் வழங்கப்பட்டுள்ளன" என்று பிரதமர் மோடி பட்டியலிட்டார்.

"வளர்ச்சியடைந்த தமிழகம், வளர்ச்சியடைந்த பாரதத்தின் பலன் தமிழ்நாட்டின் அனைத்துக் குடும்பங்களுக்கும்!""

"தூத்துக்குடி ஒரு புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. வளர்ச்சியடைந்த தமிழகம், வளர்ச்சியடைந்த பாரதத்தின் பலன்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் குடும்ப உறுப்பினர்களுக்கும் கிடைக்கும். இந்த அனைத்துத் திட்டங்களுக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பிரதமர் மோடி வாழ்த்தினார்.

தமிழ்நாட்டில் ரயில்வே துறையில் பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதற்கு உதாரணமாக, 'வந்தே பாரத்' ரயில் இயக்கப்பட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

நிகழ்ச்சியின் முடிவில், "உங்களின் உற்சாகத்தை நான் பார்க்கிறேன். இந்த உற்சாகத்தின் வெளிப்பாடாக உங்களது மொபைலில் உள்ள ஒளியை எடுத்து காண்பியுங்கள்" என்று பிரதமர் அழைப்பு விடுத்ததும், தொண்டர்கள் அனைவரும் தங்கள் செல்போன்களில் ஒளியை காண்பித்து ஆரவாரம் செய்தனர்.

பின்னர், தனது பேச்சை முடித்துக் கொண்டு, "பாரத் மாதா கி ஜெய்" என இந்தியில் கூறிவிட்டு, தமிழில் "வணக்கம்" என்று தெரிவித்தார்.

தமிழர்களின் பாரம்பரியமிக்க உடையில் இருந்தபடியே, பொதுமக்களுக்குக் கையசைத்துவிட்டு, தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு சற்று நிமிடத்தில் புறப்பட்டார். இதன் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு சேவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.