சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடி மக்களுக்கு சேவை செய்ய சென்ற கேரளமாநிலத்தை சேர்ந்த கன்னியாஸ்திரிகளை பொய் புகார் கூறி கைது செய்ததைக் கண்டித்து நாசரேத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கேரளாவைச் சேர்ந்த அருட்சகோதரிகள் மேரி மற்றும் வந்தனா ஆகியோர் சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரை சேர்ந்த பழங்குடி இளம் பெண்கள் 3 பேரை செவிலியர் படிக்க வைக்க தேவையான உதவிகளை செய்துள்ளனர். இந்த நிலையிலி, அவர்களை ஆக்ரா அழைத்துச் சென்று மதமாற்றம் செய்ய வந்துள்ளதாக பொய் புகார் கூறி எவ்வித முறையான விசாரணையும் மேற்கொள்ளாமல் சத்தீஸ்கர் மாநில அரசு அருட்சகோதரிகளை கைது செய்து சிறையில் அடைத்தது. தற்போது, அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பஸ் நிலையம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு துரை குடியிருப்பு பங்குத்தந்தை ஜெரால்டு ரவி தலைமை வகித்தார். பிரகாசபுரம் பங்குத்தந்தை ஆரோக்கிய அமல்ராஜ் , நாசரேத் பேராலயத்தின் தலைமை குருவானவர் ஹென்றி ஜீவானந்தம், உதவி குரு தனசேகர் ராஜா, மூக்குப்பீறி தூய . மாற்கு ஆலய போதகர் ஞான சிங் எட்வின், பிரகாசபுரம் சேகர குரு நவராஜ் தென்மண்டல பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரான்ஸிஸ் தென்மண்டல கலப்பை இதழ் ஆசிரியர் அருட்திரு செல்வரத்தினம், காமா ஜெபக்குழு ஸ்தாபகர் குருவானவர் சாமுவேல், முன்னாள் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி தாளாளர் லேவி அசோக் சுந்தர்ராஜ் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தில் நாசரேத், பிரகாசபுரம், தோப்பூர் , மாதவனம். கந்தசாமிபுரம். உடையார்குளம் , மூக்குப்பீறி, பாட்டக்கரை, ஒய்யான்குடி, வகுத்தான்குளம், வாழையடி சுற்றுவட்டார கிறிஸ்தவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.










