அறநிலையத்துறை சார்பில் ஆன்மீக பயணம் : திருச்செந்தூர் கோவிலில் மூத்தகுடிமக்கள் சாமி தரிசனம்

senior-citizens-visit-tiruchnedur-temple


இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 257 மூத்த குடிமக்கள் அறுபடை வீடுகளில் ஆன்மீக பயணத்தின் ஒரு பகுரிதியாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்தனர்.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முருகனின் அறுபடை வீடுகளில் ஆன்மீகப் பயணம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை பல்வேறு கட்டமாக மூத்த குடிமக்கள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கும் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று 6 பேருந்துகளில் 257 பேர் கொண்ட குழுவினர் திருத்தணி, பழனி, பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம், சுவாமிமலை தரிசனம் செய்துவிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்தனர்.

அவர்களுக்கு கோவில் நிர்வாகத்தினர் வரவேற்பு அளித்து கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய அழைத்துச் சென்றனர். கோவிலுக்குள் மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், சம்ஹாரமூர்த்தி உள்பட பல்வேறு தெய்வங்களை தரிசனம் செய்தனர்.

அதைத் தொடர்ந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் மேற்கொண்ட மூத்த குடிமக்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாத பைகளை கோவில் இணை ஆணையர் ராமு தலைமையில் பணியாளர்கள் வழங்கி வழி அனுப்பி வைத்தனர்.