தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகேயுள்ள துரைசிங் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் சூர்யா (21) கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் சூர்யா, தாளமுத்து நகர் பகுதியில் இருந்து வெள்ளப்பட்டி கிராமத்திற்கு செல்லும் சாலையில் நண்பர்களுடன் மது குடிக்க சென்றுள்ளார். அப்போது, நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில், சூர்யாவை கத்தியால் குத்தியுள்ளனர். இதில், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சூர்யா பரிதாபமாக பலியானார்.

சம்பவ இடத்திற்கு சென்ற தாளமுத்து நகர் காவல்துறையினர் சூர்யாவின் உடலை கைப்பற்றி உடற் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சூர்யாவை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய தூத்துக்குடி கணபதி நகரைச் சேர்ந்த உத்தர கண்ணன், மேல அலங்காரத்தட்டை சேர்ந்த மாரிமுத்து ,டி.சுனாமி காலனியை சார்ந்த மகேந்திரன் மற்றும் இசக்கி ராஜா ஆகிய நான்கு பேரை தாளமுத்து நகர் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தனர்.









