நெல்லையில் தோற்றால் திமுக கட்சி நிர்வாகிகள் பதவி பறிப்பா? - கனிமொழி விளக்கம்

will-dmk-party-leaders-lose-their-positions-if-they-lose-in-nellai-kanimozhi-s-explanation


தேர்தலுக்கு முன்னதாக அவசர அவசரமாக வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணியை (SIR) மேற்கொள்வது, தேர்தல் ஆணையத்தை தவறாகப் பயன்படுத்தி ஜனநாயகத்தைக் கொலை செய்யும் முயற்சி என்று திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கூறியதாவது,

"இந்த எஸ்.ஐ.ஆர் (SIR) எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி என்பது, தேர்தலுக்கு முன்னால் இவ்வளவு அவசர அவசரமாகக் கொண்டு வர வேண்டிய அவசியமே இல்லாத ஒன்று. இதை நேர்மையாக நடத்த வேண்டும் என்று நினைத்திருந்தால், போதிய கால அவகாசம் கொடுத்து, முறையாகச் செய்திருக்க முடியும்.

பீகாரில் என்ன நடந்தது என்பதை நாம் கண்கூடாகப் பார்த்தோம். லட்சக்கணக்கான மக்கள் தங்களுடைய வாக்குரிமையைப் பறிகொடுத்துள்ளனர். இது ஜனநாயகத்தையே கொலை செய்யக்கூடிய ஒரு முயற்சியாகத்தான் பார்க்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்திக்கொண்டு, மக்களுடைய வாக்குரிமையைப் பறிக்கக்கூடிய ஒரு சூழல் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதுகுறித்து மிகத் தெளிவாக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் விளக்கியுள்ளார். நமது முதலமைச்சர் அவர்களும் இதற்கு முழு ஆதரவளித்து, பீகாரில் நடக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்திலும் பங்கேற்றுள்ளார். இதையெல்லாம் எதிர்த்துதான், திராவிட முன்னேற்றக் கழகமும், நமது தோழமைக் கட்சிகளும் இணைந்து ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளோம்."

கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "யாருக்கு எதிரான குற்றமாக இருந்தாலும், அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், அது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை நாம் நிச்சயமாகக் கண்டிக்க வேண்டும். இந்த சமூகம் முதலில், பாதிக்கப்பட்ட பெண் மீது பழி சுமத்துவதை நிறுத்த வேண்டும்.

இந்த விவகாரத்தில், தமிழக முதலமைச்சர் அவர்கள் உடனடியாகத் தலையிட்டு, விரைவான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். குற்றவாளிகளுக்கு எதிராக மிக கடுமையான தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என்று முழு முயற்சியோடு அரசு ஈடுபட்டுள்ளது. முதலமைச்சர் அவர்களும் அதிகாரிகளுக்கு அதை அறிவுறுத்தியுள்ளார். ஒருவேளை நடவடிக்கை எடுக்கத் தவறினால் நாம் கண்டனம் தெரிவிக்கலாம். ஆனால், இங்கே உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

*கட்சித் தலைவரின் அறிவுரை அது*

நெல்லை சட்டமன்றத் தொகுதியில் திமுக வெற்றி பெறாவிட்டால் கட்சி நிர்வாகிகள் பதவி பறிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் எச்சரித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, "நான் அந்தக் கூட்டத்தில் இருந்தேன். அவர் யாருடைய பதவியையும் பறிப்பேன் என்று கூறவில்லை. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று ஒரு கட்சியின் தலைவர் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் அறிவுரை சொல்வது இயல்பானதும், அவசியமானதும் ஆகும். வெற்றி பெறுவதற்காக அனைவரும் முனைப்போடு பாடுபட வேண்டும் என்றுதான் அவர் கூறினார்" எனத் தெளிவுபடுத்தினார்.

READ MORE ABOUT :