கூடவே இருந்து கழுத்தை அறுத்த மீனவர் : தருவைகுளத்தில் சக மீனவர்கள் கொந்தளிப்பு

fishermen-s-nets-stolen-in-thoothukudi-s-daruvaikulam

தூத்துக்குடி தருவைகுளம் மீனவ கிராமத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மீனவர்களின் வலைகள் திருடப்பட்ட நிலையில், இன்று கடலுக்கு சென்று திரும்பிய ரெக்சின் என்பவரது படகில் திருடப்பட்ட வலைகள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி அருகே உள்ளது தருவைகுளம் மீனவ கிராமம். இந்த மீனவ கிராமத்தில் சுமார் 250 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் 150 க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர் . இந்த நிலையில், மீன்பிடி படகுகளில் இருந்து வலைகள் சிலிண்டர்கள் மற்றும் சமையல் அடுப்பு ,மீன்பிடி உபகரணங்கள் ஆகியவை தொடர்ந்து காணாமல் போனது.

போலீசில் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் திருட்டு கும்பலை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறினர். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் இந்த திருட்டு கும்பலை கண்டுபிடித்துக் கொடுத்தால் ஒரு லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என தருவைகுளம் ஊர் மற்றும் மீன்பிடி துறைமுகம் முழுவதும் போஸ்டர்களை ஒட்டினர்.

இந்த நிலையில், மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை திருடியது அதே தருவைகுளம் மீன்பிடி துறைமுகத்தில் படகு வைத்துள்ள ரெக்சின் என்பது தெரியவந்தது . இவர், இரண்டு விசைப்படகுகள் வைத்து ஆழ்கடலில் மீன் பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார் .ஆண்டுக்கு ஒரு முறை சேதமாகும் மீன்பிடிவலைகளை அவ்வப்போது மற்ற மீனவர்கள் மாற்றி வந்துள்ளனர் . ஆனால் , இரு . ஆண்டுகளுக்கு மேலாக ரெக்சின் தனது படகில் உள்ள வலைகளை மாற்றவோ புதிய வலைகளை வாங்கவோ செய்யவில்லை. இதன் காரணமாக தருவைகுளம் விசைப்படகு மீனவர்களுக்கு ரெக்சின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது

சில நாட்களுக்கு முன்பு ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டு கரை திரும்பிய ரெக்சின் படகை தருவைக்குளம் விசைப்படகு மீனவர்கள் சோதனை செய்தனர். அதில், தருவைகுளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களின் காணாமல் போன மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் சிலிண்டர்கள் ஆகியவை இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, ரெக்சின் படகில் வேலை பார்த்த டிரைவர் உள்ளிட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் அவரது இன்னொரு விசைப்படகு ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தது. அந்த படகு கரையை திரும்பாமல் காலம் தாழ்த்தி வந்தது . தருவைகுளம் விசைப்படகு மீனவர்கள் தருவைகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து , காவல்துறையினர் உடனடியாக அந்த படகை தருவைகுளம் மீன்பிடி துறைமுகத்திற்கு கரை திரும்ப அறிவுறுத்தினர்

நேற்று மாலை ரெக்சினின் மற்றொரு விசைப்படகு தருவைகுளம் மீன்பிடி துறைமுகத்திற்கு வந்தது . அங்கே, காத்திருந்த தருவை குளம் மீனவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் வலையை பறி கொடுத்த மீனவர்கள் அவரது படகல் ஏறி சோதனை செய்ய முயன்றனர். அப்போது , அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர்களை காவல்துறை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என விசைப்படகு மீனவர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ரெக்சின் திருடிய வலைகளை பல லட்ச ரூபாய்க்கு வெளி மாவட்ட மீனவர்களிடம் விற்பனை செய்து பணம் சம்பாதித்ததும் தெரிய வந்துள்ளது

இந்த சம்பவத்தை தொடர்ந்து தருவைகுளம் மீனவ கிராமத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பெயரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்

READ MORE ABOUT :