தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தல் : ஓய்வு பெற்ற நீதிபதி மீது பரபரப்பு குற்றச்சாட்டு

thoothukudi-nazareth-thirumandala-election-issue-sensational-allegations-against-retired-judge

தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்கு நடைபெற்று வரும் தேர்தலில் ஏற்கனவே லே செயலாளராக இருந்த டி .எஸ் .எப் அணியை சேர்ந்த கிப்சன் தலைமையில் ஒரு அணியினரும் முன்னாள் லே செயலாளர் எஸ். டி. கே ராஜன் தலைமையில் ஒரு அணியினர் மற்றும் தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல மீட்பு அணி என மூன்று பிரிவாக போட்டியிட்டனர். இந்த நிலையில் மீட்பு அணியினர் எஸ். டி. கே ராஜன் அணி மற்றும் கிப்சன் அணி நிர்வாகத்தினர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தனர் . இதைத் தொடர்ந்து நேற்று டி.எஸ்.எப் கிப்சன் அணியினர் செய்தியாளர்களிடத்தில் கூறியதாவது,


தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தில் எங்கள் நிர்வாகத்தின் மீது எஸ் .டி . கே ராஜன் அணியினர் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது . மூன்றாவது அணி என்று கூறியவர்கள் தற்போது எஸ், டி கே ராஜன் அணியுடன் சேர்ந்து கொண்டு குற்றச்சாட்டுகளை தெரிவிக்கின்றனர். ஆசிரியர் நியமனத்தில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை. வசூல் செய்யப்பட்ட பணம் அனைத்தும் வங்கியில் வைப்பு வைக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் ஹெச்டிஎஃப்சி வங்கியில் கணக்கு துவங்கினோம். அந்த வங்கியினர் பள்ளிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்வதாக கூறினார்கள் . அதனால் அங்கு கணக்கு துவங்கப்பட்டுள்ளது . ஆசிரியர்கள் பணம் அங்கே வரவு வைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம், தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்துக்கான கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. குருவானவர் நியமனத்துக்காக ரூ. 2 லட்சம் பணம் பெறப்பட்டு, அனைத்தும் வரவு வைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்திற்கு 20 ஆண்டுகால போராட்டத்திற்கு பின்பு தற்போது சிறப்பான முறையில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது . இதற்கான டெண்டரை பிஷப் திமோதி வெளியிட்டார் . குறைவான தொகை குறிப்பிட்டவர்களுக்கே பிஷப் டெண்டர் அளித்தார்.

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல புதிய கட்டடம் சுமார் 25 ஆண்டு காலம் ஆகியும் கட்டப்படாமல் இருந்தது. எங்கள் நிர்வாகத்தில்தான் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அடுத்து, நாங்கள் நிர்வாகத்துக்கு வந்த பிறகு, இந்த கட்டடத்தை திறப்போம். வழக்கு செலவுக்காக நாங்கள் நிர்வாகத்தில் இருந்த போது , நிர்வாக பணத்தை செலவு செய்தாம். நிர்வாகத்தில் இல்லாத போது, சொந்த பணத்தை செலவிட்டோம். எனவே , அதிலும் முறைகேடு கிடையாது

தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் தேர்தலை நடத்த நியமனம் செய்யப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி ஒரு பிரிவினருக்கு ஆதரவாக செயல்படுகிறார். நீதிபதி என்றால் பொதுவாக இருக்க வேண்டும். முறையான வாக்காளர் பட்டியல் வெளியிடாமல் கூடுதலாக உறுப்பினர்களை சேர்த்து முறைகேடாக வெற்றி பெற்றுள்ளார்கள். தேர்தல் முறையாக நடைபெறவில்லை. தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தில் ஆறு கவுன்சில்கள் உள்ளன. அதில் 5 கவுன்சில்களில் சுமார் 60 சதவீதம் முதல் 62% உறுப்பினர்களை நாங்கள் பெற்றுள்ளோம். எங்கள் அணியில் வெற்றி பெற்றவர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வந்தன . ஆனால் யாரும் எதிரணிக்கு செல்லவில்லை. குருவானவர்கள் எங்கள் அணிக்கு ஆதரவாக உள்ளனர்.

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்திற்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் கல்வி நிறுவனங்கள் உள்ளன . மேலும் 600 தேவாலயங்கள் இந்த திருமண்டலத்தின் கீழ் செயல்படுகின்றன . பணம் புரளும் திருமண்டலமாக உள்ளதால், ஒவ்வொரு அணியினரும் அரசியல் கட்சிகளையும் மிஞ்சும் வகையில் பதவிகளை பெறுவதற்காக குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர் .

இவ்வாறு அவர் கூறினார்.