ஏரல் அருகே அரசு புறம்போக்கு நிலத்தை திமுக முன்னாள் எம்.பி ஆக்கிரமிப்பு செய்தாரா?

former-DMK-MP-encroach-government-land-near-Eral

ஏரல் ரூ. 60 லட்சம் மதிப்பிலான அரசு புறம்போக்கு நிலத்தை திமுகவை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயதுரை பினாமி பெயரில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக ஏரல் தாசில்தாரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார் அளித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா மங்களபுரம் கிராமத்தில் முப்பிடாதி அம்மன் கோவில் பின்புறம் சர்வே நம்பர் 743 /2 Aமற்றும் 780 ஆகிய எண்களில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் சுமார் 1 1/4 ஏக்கர் உள்ளது. இதன் சந்தை மதிப்பு சுமார் 60 லட்சம் ஆகும் . இந்த அரசு புறம்போக்கு நிலத்தை அபகரிக்கும் நோக்கத்துடன் திமுகவை சேர்ந்த தூத்துக்குடி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயதுரையின் பினாமி என்று கூறப்படும் அழகியநம்பி என்பவர் பெயரில் அரசு புறம்போக்கு நிலம் அருகே உள்ள சொத்துக்களை குறைந்த விலைக்கு வாங்கியதாகவும் , பின்னர் அரசு புறம்போக்கு நிலம் 1 1/4 ஏக்கரையும் சேர்த்து அபகரிக்கும் வகையில் ஜேசிபி இயந்திரம் மூலம் சுத்தம் செய்து இரும்பு முள்வேலி அமைத்ததாகவும் கூறப்படுகிறது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடம் நீர் செல்வதற்கான புறம்போக்கு நிலமாக உள்ளதாக கூறப்படுகிறது

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடி மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் யு.எஸ்.சேகர் தலைமையில் அதிமுக வழக்கறிஞர்கள் நேற்று ஏரல் தாசில்தாரை சந்தித்து மனு அளித்தனர். அதில், அரசு புறம்போக்கு நிலத்தை திமுக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயதுரை பினாமி பெயரில் ஆக்கிரமிப்பு செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும். ஏற்கனவே தமிழக அரசு நீர் பிடிப்பு ஆக்கிரமிப்புகளை தடுக்க அரசாணை பிறப்பித்துள்ளது .எனவே , சட்ட விரோத இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை தடுத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயதுரை மற்றும் அவரது பினாமியாக கூறப்படும் அழகிய நம்பி ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் எம்பி ஜெயதுரை தரப்பினர் ,தாங்கள் முறையாக சர்வேயர் மூலம் அளவீடு செய்து இடத்தை பத்திரப்பதிவு செய்துள்ளோம். நாங்கள் எந்தவித ஆக்கிரமிப்பு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

READ MORE ABOUT :