நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் பிரசன்ன திருநாள் : போட்டி போட்டு தேங்காய் ஏலம்

the-feast-of-epiphany-at-st-john-s-cathedral-nazareth

நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் பிரசன்ன திருநாளை முன்னிட்டு தீபம் ஏற்றி சிறப்பு ஆராதனை நடந்தது.

இயேசு கிறிஸ்து குழந்தையாக உலகத்தில் பிறந்ததைக் கொண்டாடும் வகையில் கிறிஸ்மஸ் பண்டிகை டிசம்பர் மாதம் 25ந் தேதி கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்து பிறந்த செய்தியைக் கேள்விப்பட்டு கிழக்கு தேசத்தில் இருந்து 3 வானியல் அறிஞர்களான சாஸ்திரிகள் புதிதாக தோன்றிய நட்சத்திரத்தைப் பார்த்து, இயேசு குழந்தையாக புவியில் பிறந்த செய்தியை அறிந்து, அந்த நட்சத்திரம் வழிகாட்டிய திசையில் சென்றனர். பின்னர், குழந்தை இயேசுவுக்கு சாஸ்திரிகள் மூவரும் பொன், தூபவர்க்கம், வெள்ளைப்பவளம் போன்றவற்றை காணிக்கையாக படைத்தனர்.

இதை நினைவுகூரும் வகையில் ஜனவரி 6ந் தேதியை புற ஜாதிகளின் கிறிஸ்மஸ் அல்லது பிரசன்னத் திருநாள் என கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். இதையாட்டி, நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் பிரசன்ன திருநாள் ஆராதனை பேராலய தலைமை போதகர் ஹென்றி ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது. சபை மக்கள் வீடுகளில் இருந்து கொண்டு வந்த உலக்கையை தரையில் நட்டு வைத்து, நடுவில் நெல் குத்துவதற்கு எதுவாக உள்ள குழியில் அரை முறி தேங்காயில் எண்ணெய் ஊற்றி திரி அமைத்து தீபம் ஏற்றி வைத்திருந்தார்கள்.

ஆராதனையில் உதவி குருவானவர் தனசேகர் ராஜா, சபை ஊழியர்கள் ஜெபராஜ், ஜெசு செல்வன் மற்றும் சபை மக்கள் கலந்து கொண்டனர். அதேபோல, அகப்பைகுளம், பிரகாசபுரம், மூக்குப்பீறி, வாழையடி, கடயனோடை சி.எஸ்.ஐ ஆலயங்களிலும் பிரசன்னதிருநாள் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பிரார்த்தனை முடிந்ததும், விளக்குகளில் பயன்படுத்தப்பட்ட தேங்காயை சபை மக்கள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.