நாசரேத், ஏரல் பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர் காக்கும் வசதிக்காக, 24/7 இயங்கக்கூடிய அவசர கால அரசு பன்னோக்கு மருத்துவமனை (Emergency Multi-Specialty Hospital) அமைக்கப்பட வேண்டும் என்பது மக்களின் 50 ஆண்டுகால கோரிக்கையாகும்.
“பொன்னான நேரம்” (Golden Hour) ஏன் முக்கியம்?
தூத்துக்குடி மாவட்டத்தில் நாசரேத் கல்வி நகரம். அதேவேளையில்,ஏரல் வணிக நகரம். இந்த இரு நகரங்களின் 20 கி.மீ சுற்றளவுக்குள் 24 மணி நேர அவசர கால சிறப்புச் சிகிச்சை மையங்களும் (ICU/Emergency Support) இல்லை. இதனால், மாரடைப்பு , கார்டியாக் அரெஸட் போன்ற இதய நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் எதிர்பாராத சாலை விபத்துகளில் சிக்குபவர்களை 45 கி.மு தொலைவில் உள்ள திருநெல்வேலி அல்லது தூத்துக்குடி அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல வேண்டியதுள்ளது.

இதன் காரணமாக, “பொன்னான நேரத்திற்குள்” (Golden Hour) முதலுதவி சிகிச்சை கிடைக்காமல், வழியிலேயே பலர் உயிர் இழக்கும் துயரச் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இந்த உயிர்ப்பலிகளைத் தடுக்கவே, இந்த பகுதியில் அரசு பன்னோக்கு மருத்துவமனை அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை ஆண்டாண்டு காலமாக இருந்தது.
அமைச்சரிடத்தில் மனு
இந்த கோரிக்கையை வலியுறுத்தி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜிடத்தில் தொழிலதிபர் ஜெகன் செல்வராஜ் மனு அளித்துள்ளார். மனுவை பரிசீலித்த அமைச்சர் பொதுமக்களின் உயிரைக் காக்க உடனடியாக, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.இந்த நீண்ட நாள் பிரச்சினையின் தீவிரத்தை அறிந்த, நிதி மற்றும் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் மரிய வில்சனும் திட்டத்தை நிறைவேற்ற உதவி புரிவதாக தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் இந்த திட்டம் நனவாக உறுதுணையாக இருப்பேன் என்று உறுதியளித்துள்ளார். எனவே, ஏரல் , நாசரேத் பகுதியைச் சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில், இந்த இரு நகரங்களுக்கு மத்தியில் பன்னோக்கு மருத்துவமனை அமைப்பது குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளளது.







