நெல்லையில் இருந்து நாகர்கோவில் செல்லும் புறவழிச் சாலையில் 10 கி. மீ தொலைவில் பொன்னாக்குடி ஊர் அமைந்துள்ளது. இங்குள்ள பரணி நகர் பகுதியில் ஆனந்த சுப்பிரமணியன் என்பவரின் வீடு உள்ளது. தந்தை செல்வரத்தினம், கோவையில் பணியாற்றி வரும் நிலையில், பொன்னாக்குடியில் தனது தாய், தங்கையுடன் ஆனந்த் சுப்ரமணியம் வசிக்கிறார்.
இந்த நிலையில், நேற்றிரவு மளிகை கடை வியாபாரத்தை முடித்துவிட்டு ஆனந்த் சுப்ரமணியம் வீட்டில் உறங்கியுள்ளார். இன்று அதிகாலை 5 மணிக்கு எழுந்துள்ளார். அப்போது, வீட்டின் மொட்டை மாடியில் ஆள் நடமாட்டம் தெரிந்துள்ளது. உடனடியாக, மாடியில் சென்று பார்த்தபோது அங்கே மூன்று பேர் இருந்துள்ளனர். ஆனந்த் சுப்ரமணியத்தை பார்த்ததும் இருவர் அவரை தள்ளி விட்டு தப்பி ஓடியுள்ளனர். இந்த சமயத்தில் ஆனந்த் சுப்ரமணியம் மற்றொரு இளைஞரை பாய்ந்து பிடித்து கொண்டார். பின்னர், கூச்சல் போட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார். போலீசுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. பிடிபட்டவர் வட மாநில இளைஞர் என்பதும் தெரிய வந்தது.
தகவல் அறிந்து முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பிடிபட்டவர் மேற்கு வங்கத்தை சேர்ந்த இளைஞர் ஆவார். இவர், தூத்துக்குடியில் வேலை பார்த்து வரும் நிலையில், மன நல பாதிப்பு காரணமாக நடந்தே திருநெல்வேலி வந்துள்ளார். பின்னர், நாகர்கோவில் சாலையில் உள்ள பொன்னாக்குடி வந்து இந்த வீட்டின் மொட்டைம மாடியில் பதுங்கி இருந்ததாகவும் கூறுகிறார். தப்பி ஓடிய மற்ற இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.










