நெல்லை மாவட்டம் இடைக்காலில் மலநாடு அம்மோனியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் வெளியேற்றிய கழிவுகளால் அந்த பகுதி மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வாயு கசிவு ஏற்பட்டதையடுத்து, விவசாயிகள், பள்ளி குழந்தைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
தொடர்ந்து, பாப்பாக்குடி ஒன்றியத் தலைவர் எஸ்.பூங்கோதை சசிகுமார், வாயு கசிவு குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, அப்போதையை சேரன்மகாதேவி சப்-கலெக்டர் அர்பித் ஜெயினிடம் மனு அளித்தார்.
இதையடுத்து, தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் இந்த ஆலையை ஆய்வு செய்தார். அவர் அளித்த அறிக்கையின்படி, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு ஆலையின் உரிமையை ரத்து செய்ய அம்பாசமுத்திரம் தாசில்தார் பரிந்துரைத்தார். தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் ஆலையின் உரிமத்தை ரத்து செய்தது.
இந்த நிலையில், இந்த ஆலை இரவு நேரத்தில் ரகசியமாக இயக்கப்படுவதாக இடைக்கால் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து சட்டவிரோதமாக இரவு நேரத்தில் ஆலையை நடத்தி வருவதாக இடைக்கால் ஊராட்சி துணைத் தலைவர் எஸ்.தர்மராஜ், முதலமைச்சரின் சிறப்புப் பிரிவில் சமீபத்தில் புகார் அளித்தார்
ஆனால், இந்த நிறுவனத்தின் நிறுவனர் பி.எஸ். ஸ்ரீதேத் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு நாங்கள் ஆலையின் செயல்பாடுகளை நிறுத்திவிட்டோம். ஆலையை விற்பனை மையமாக மட்டுமே பயன்படுத்துகிறோம். ஓசூர் மற்றும் கொச்சியிலிருந்து அம்மோனியா சிலிண்டர்கள் எங்கள் ஆலைக்கு கொண்டு வரப்படுகின்றன. பின்னர், டெலிவரிக்காக வாகனங்களில் ஏற்றி அனுப்பி வைக்கப்படுகின்றன. எங்கள் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படவில்லை. அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாங்கள் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியபடி பிரச்னைகளை சரி செய்துள்ளோம், ஆனால் , அதிகாரிகள் ஆலையை ஆய்வு செய்ய வரவில்லை. உரிமத்தை மீண்டும் வழங்கவில்லை. இதனால், அவமதிப்பு மனு தாக்கல் செய்ய உள்ளேன். தங்கள் ஆலை குறித்து தொடர்ந்து உள்நோக்கத்துடன் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன' என்கிறார்
பாப்பாக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.சுப்புலட்சுமி. ஜனவரி மாதம் நடந்த ஆய்வின்போது, ஆலையின் செயல்பாடு சந்தேகத்துக்குரிய வகையில் இருப்பதாக தெரிவித்துள்ளார் இதையடுத்து, நெல்லை மாவட்ட கலெக்டர் ஆர்.சுகுமார் பிப்ரவரி 17 ஆம் தேதி (திங்கள்கிழமை ) ஆலையின் செயல்பாடு குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.