மீண்டும் தாமிரபரணியில் கலக்கும் கழிவுநீர் - நடவடிக்கை எடுக்கப்படுமா?

நெல்லை சிந்துபூந்துறையில் தாமிரபரணி ஆற்றின் கரையில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு தொட்டியில் இருந்து கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலக்கிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் தொட்டிகளை முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தன்பொருநை என அழைக்கப்படும் தாமிரபரணி ஆறு, நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் பூங்குளம் பகுதியில் தோன்றி தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் சங்குமுகத்தில் கடலில் கலக்கிறது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி விருது நகர் உள்ளிட்ட மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இந்த நதியால் நெல்லை, தூத் துக்குடி மாவட்டங்களில் சுமார் 82 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பாசன வசதி பெறுகிறது. இத்தகைய சிறப்புகளை உடைய தாமிரபரணியில் ஆலைக்கழிவுகள், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மனித கழிவுகள் உள்ளிட்ட காரணிகளால் ஆறு மாசடைந்து வருகிறது.

நெல்லை மாநகர பகுதியில் குறுக்குத்துறை, மீனாட்சிபுரம், மேலநத்தம், வண்ணார்பேட்டை சிந்து பூந்துறை, கொக்கிரகுளம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், தாமிரபரணியில் கலந்து தண்ணீர் மாசுபட்டு வருகிறது. நெல்லை மாநகரப் பகுதி மேலப்பாளையம் மண்டலத்தில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், பாளையங்கால் வாயிலும் கலந்து வருகிறது.

இதனால், தாமிரபரணியை தூய்மைப்படுத்தவும், கழிவுகள் கலப்பதை தடுக்கவும் கோரி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்கள் அடிப்படையில் ஐகோர்ட் நீதிபதிகளும் கடந்தாண்டு நெல்லை தாமிரபரணி ஆற்றை ஆய்வு செய்துவிட்டு சென்றனர். அப்போது பாதாள சாக்கடை திட்டம் மட்டுமே தீர்வு என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நெல்லையில் பாதாள சாக்கடை கழிவுநீர் சிந்துபூந்துறையில் தொட்டிகளுக்கு அதிகப்படியான கழிவுநீர் செல்வதால், அங்கிருந்து தண்ணீர் வெளியேறி ஆற்றில் கலந்து வருகிறது. இதனால் ஆற்றுபகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. கொசுத் தொல்லையும் அதிகரித்து வருகிறது. சிந்துபூந்துறை பகுதியில் குளிக்க செல்வோர் கழிவுநீர் வாடையோடு சுவாசித்தபடியே ஆற்றுப்பகுதிக்கு செல்கின்றனர். கழிவுநீர் தொட்டிகளை முறையாக பராமரித்து, ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க விரைந்து நடவடிக்கை தேவை என அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர். கழிவுநீர் தொட்டியில் இருந்து பம்பிங் செய்து குழாய்கள் மூலம் அவற்றை பாதாள சாக்கடை மெயின் குழாய்களோடு இணைக்க நடவடிக்கை அவசியம் என பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்