வீட்டு முன்பு கோலமிட்டு இந்தியை எதிர்க்கும் நெல்லை மக்கள் - அப்துல் வகாப் எம்.எல்.ஏ அறிக்கையால் நடந்த மாற்றம்

நெல்லை மத்திய மாவட்டத்திற்குட்பட்ட திமுக நிர்வாகிகளுக்கு நெல்லை மத்திய மாவட்ட செயலாளரும் அப்துல் வகாப் எம்.எல்.ஏவும் விடுத்துள்ள வேண்டுகோள் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

ஒன்றிய அரசு மும்மொழிக்கொள்கையை ஏற்றால்தான் பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்குவோம் என்று மிரட்டி, நம் மாநிலத்திற்கு தர வேண்டிய நிதியை முழுமையாக நிறுத்தி வைத்திருக்கிறது. இந்தித் திணிப்பை ஒரு போதும் ஏற்க மாட்டோம் என்று மாண்புமிகு கழகத்தலைவர் அவர்கள் கடுமையாக எதிர்த்து வருகிறார். இந்தி திணிப்பை ஒன்றிய அரசு மேற்கொள்ளும் போதெல்லாம் தமிழ்நாடு ஒன்றிணைந்து எதிர்த்து வந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, நமது தன்னிகரில்லா தலைவர் மாண்புமிகு முதல்வர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க இளைஞர்களின் எழுச்சி நாயகன் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி , தற்போதைய இந்தித் திணிப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கூறி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நமது தமிழகத்தின் வலுவான எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும் அடுத்த ஒரு வாரத்திற்கு , நமது மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் எளிய நிகழ்ச்சிகளை அடுத்தடுத்து நடத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
உதாரணமாக,

1. ஒருவாரத்திற்கு தொடர்ச்சியாக இல்லங்களின் முன்பாக இந்தித் திணிப்பை எதிர்ப்போம் என்ற வாசகத்துடன் கோலமிடச் சொல்லலாம்.

2. பேருந்து நிறுத்தங்கள்- ஆட்டோ நிறுத்தங்களில் “இந்தி திணிப்பை நிறுத்து” என்ற பதாகைகளை நிறுவலாம்.

3. எளிய வாசகங்களுடன் துண்டறிக்கைகளை அச்சடித்து வீடு வீடாக வழங்கலாம். இவை தவிர, அந்தந்த இடங்களுக்கு ஏற்ப நிகழ்ச்சிகளைத் திட்டமிடலாம்.

பிப்ரவரி 28 ஆம் தேதி வரையிலும் இத்தகைய எளிமையான செயல்பாடுகள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதன் நிழற்படங்களையும் – வீடியோக்களையும், நெல்லை மத்திய மாவட்ட கழக அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.