திருநெல்வேலியில் தனியாக செல்லும் பெண்களை மறித்து கேலி செய்ததுடன் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஒரு லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாநகரின் பல பகுதிகளில் தனியாக செல்லும் பெண்களை வழி மறித்து கேலி கிண்டல் செய்வதுடன் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. பாதிக்கப்பட்ட கேடிசி நகரை சேர்ந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாளையங்கோட்டை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். வாகன தணிப்பிலும் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலைய பகுதி கே டி சி நகர் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் கைவரிசை காட்டிய மேலநத்தத்தைச் சேர்ந்த மாயாண்டி (21) அஜித் குமார் (19) ஆகிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். மின்னல் வேகத்தில் செல்லும் இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரியும் இவர்கள் தனியாக செல்லும் பெண்களை கேலி செய்வதோடு, அவர்கள் அணிந்திருக்கும் நகைகளை பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வழிப்பறி மற்றும் கேலி கிண்டல் செய்வதற்காக பயன்படுத்திய இரண்டு சக்கர வாகனத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். வேறு கொள்ளை சம்பங்களிலும் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்கிற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.