திருச்செந்தூர் மாசி திருவிழாவை முன்னிட்டு கேரளா மற்றுதம் குமரி மாவட்டத்தில் இருந்து நடை பயணமாக வந்த முருக பக்தர்களுக்கு புத்துணர்ச்சி தரும் வகையில் கால்களுக்கு மசாஜ் செய்து கொடுக்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் வேப்பிலான்குளத்தில் "திருச்செந்தூர் தர்மசாலா" என்ற பெயரில் நல்லகண்ணு என்ற நடராஜன் என்பவர் கடந்த 34 ஆண்டுகளாக முருக பக்தர்களுக்கு இலவச சேவை செய்து வருகிறார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நேற்று மாசி திருவிழா கொடியேற்றம் தொடங்கியதை முன்னிட்டு தமிழகத்திலிருந்து முருக பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற நடை பயணமாக திருச்செந்தூர் வந்து கொண்டிருக்கின்றனர்.
அப்படி வரும் பக்தர்கள் ராதாபுரம் அடுத்த வேப்பிலான்குளம் என்ற ஊரில் தர்மசாலா என்ற பெயரில் இயங்கும் அன்ன சத்திரத்தில் தங்கி ஓய்வெடுத்து செல்வது வாடிக்கை. முன்பு மோர் மடம் என்ற பெயரில் இயங்கி முருக பக்தர்களுக்கு மோர் வழங்கி சேவை செய்து வந்த இந்த அமைப்பு 2000 ஆம் ஆண்டிலிருந்து அன்னதான மடமாக மாறியது. இங்கு, 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. வேப்பிலான்குளம் வடக்கன்குளம் சுற்றுவட்டார பகுதிகள் சேர்ந்த பொதுமக்கள் தன்னார்வலரோடு இணைந்து ஜாதி மத வேறுபாடின்றி முருக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர்.
பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த திருச்செந்தூர் முருகனுக்கு காவடி தூக்கி செல்வதும் உண்டு. காவடி தூக்கியபடி, பல கிலோமீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொள்வதால் கால்களில் கடும் வலி ஏற்படும். இதற்காக தர்மசாலாவில் பக்தர்களின் கால்வலி நீங்குவதற்காக பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மூலம் காலில் எண்ணெய் தடவி மசாஜ் செய்யப்படுகிறது. இதனால், முருக பக்தர்கள் வலி நீங்கி உற்சாகத்துடன் நடைபயணத்தை தொடங்குகின்றனர்.