நெல்லையை அடுத்த பாளையங்கோட்டை கோட்டூர் ரோட்டில் அய்யா வழி கோவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு வழிபாடு நடத்துவதில் இரு தரப்பிடையே பிரச்சனை இருந்த சூழலில் நீதிமன்றத்தை நாடி அய்யா அவதார தினம் கொண்டாட அனுமதி பெற்றுள்ளனர். நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளையும் கொடுத்துள்ளது. இரு தரப்பும் வழிபாடு நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை . அன்னதானம் வழங்குவது , சமையல் செய்வது உள்ளிட்டவைகளை கோவில் வளாகத்திற்கு வெளியே வைத்துக்கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஐயா வைகுண்டர் அவதாரத் திருவிழாவில் அன்னதானம் சமையல் செய்வதற்கு கோவிலுக்கு உள்ளே அனுமதி கேட்ட போது, காவல்துறை அனுமதி மறுத்தது . இதனால் , அங்கு மோதல் ஏற்பட்டது. இதனை கண்டித்து நேற்று சாலை மறியல் நடந்தது.
இந்த சம்பவம் குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த குழு நிர்வாகத்தினர் கூறும்போது :

' நாங்கள் காலம் காலமாக அய்யா வழி கோவில் அமைத்து தர்ம வழியில் கோயில் நிர்வாகத்தை கவனித்து வருகிறோம். திருவிழா நாட்களில் கோவில்களில் அனைத்து பராமரிப்புகளையும் நாங்கள் கவனித்து வருகிறோம். ஒவ்வொரு திருவிழா நாட்களிலும் கோவில் வளாகத்தில் அன்னதானம் சமைத்து பக்தர்களுக்கு வழங்குவது தான் இங்கு சிறப்பு . ஆனால் , எங்களை சமைக்க விடாமலும் அன்னதானம் செய்ய விடாமலும் எதிர் தரப்பினர் காவல் துறை மூலமாக தொடர்ந்து தொல்லை கொடுக்கின்றனர். அய்யாவின் அவதார தினமான நேற்று பக்தர்களுக்கு கோவில் வளாகத்தில் சமையல் செய்து அன்னதானம் வழங்க இருந்த நேரத்தில் போலீசார் அத்துமீறி உள்ளே நுழைந்து சமையல் பாத்திரங்களை எடுத்து சென்றது தவறு.
மணிகண்ட பெருமாள் என்பர் கொடுக்கும் அழுத்தம் காரணமாகவே எங்களுக்கு தொடர்ச்சியாக போலீசார் பல இன்னல்கள் கொடுக்கின்றனர். நீதிமன்றத்தை நாடி எங்களிடம் முறையான உத்தரவு இருந்தும் அதனை ஏற்றுக் கொள்ள காவல்துறை மறுக்கிறது. எங்களுக்காக நீதி கேட்டு வந்த வழக்கறிஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதும் , சமைத்த அன்னத்தை காவல்துறையினர் சாலையில் எடுத்து வீசியதும் அராஜகத்தின் உச்சம். தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக பக்தர்களுக்கும் நியாயத்தை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.











