நெல்லை பேருந்து நிலையத்தில் அனாதையாக கிடந்த 1.50 லட்சம் பணம், மடிக்கணிணி... அப்படியே ஒப்படைத்த எஸ்.ஐ.

பேருந்து நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பணம் ரூ 1,42,396 பணம் மற்றும் மடிக்கணினியை உரியவரிடம் ஒப்படைத்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை நெல்லை காவல் ஆணையர் பாராட்டினார்.

திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் கடந்த தேதி இரவு மேலப்பாளையம் குற்றப்பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மாடசாமி ரோந்து பணியில் இருந்தார். அப்போது, பேருந்து நிலைய நடைமேடையில் கேட்பாரற்று கிடந்த பையில் இருந்த ரூபாய் 1,42,396/- மற்றும் மடிக்கணினியை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். மேலப்பாளையம் காவல் நிலையத்திற்கு 5 ஆம் தேதி தேதி, மேற்படி பையை உரிமை கோரி வந்த தென்காசி மாவட்டம், வீராணத்தை சேர்ந்த பேச்சிமுத்து பாண்டியன் என்பவர் வந்தார். தொடர்ந்து, அவருக்கு உரிய உடமைகள்தானா? என போலீசார் ஆய்வு செய்து உறுதி செய்தனர். பின்னர், மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து, பேச்சிமுத்து பாண்டியனிடம் மடிக்கணிணி பணத்தை ஒப்படைத்தார்கள். அவற்றை பெற்று கொண்ட பேச்சிமுத்து பாண்டியன் காவல் துறையினருக்கு மனமார நன்றியை தெரிவித்து கொண்டார். மேலும் பையை ஒப்படைத்த குற்றப்பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மாடசாமியை ஆணையர் வெகுவாக பாராட்டினார். அப்போது, காவல் துணை ஆணையர்கள் (மேற்கு) V.கீதா (கிழக்கு) .V.வினோத் சாந்தாராம் (கிழக்கு ) திரு.S.விஜயகுமார் (தலைமையிடம் ) மற்றும் மேலப்பாளையம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ரஷிதா ஆகியோர் உடன் இருந்தனர்.