தாய் இறந்த துக்கத்துக்கிடையே தேர்வு எழுதிய மாணவன்: ஆறுதல் கூறிய சபாநாயகர்

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் தாய் இறந்த துக்கத்துக்கிடையேயும் பிளஸ் டு தேர்வு எழுதிய மாணவைனை நேரில் சந்தித்து சபாநாயகர் அப்பாவு ஆறுதல் கூறினார்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அண்ணாநகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி சுபலட்சுமி. இந்த தம்பதிக்கு சுனில்குமார் என்ற பிளஸ் டு படிக்கும் மகனும் யுவாசினி என்ற 9ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். கிருஷ்ணமூர்த்தி கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதற்கிடையே, இதய நோயால் பாதிக்கப்பட்டு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த சுபலட்சுமி ஏழ்மையின் காரணமாக வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும், சிகிச்சை பலனின்றி சுபலட்சுமி கடந்த திங்கட்கிழமை காலையில் இறந்து போனார்.

தாய் இறந்த தினத்தில்தான் பிளஸ் டு பொது தேர்வு தொடங்கியதால் சுனில்குமார் சோகத்துடன் பள்ளி சென்று தமிழ் தேர்வை எழுதினார். பின்னர் ,மாலையில் வந்து தாய்க்கு இறுதிச்சடங்கு செய்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தமிழக சபாநாயகர் அப்பாவு மாணவன் சுனில்குமார் வீட்டிற்கு சென்று அவருக்கும் அவரது உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினார். நிவாரண உதவித் தொகையும் வழங்கினார். மேலும் , சுனில்குமாரின் மேல் படிப்பு வரை உதவி செய்வதாகவும் அப்பாவு உறுதியளித்தார்.