எஸ்.டி.பி.ஐ கட்சி தலைவர் கைது : நெல்லையில் கண்டன ஆர்ப்பாட்டம்

கடந்த 2006 ஆம் ஆண்டு உருவான பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் அரசியல் பிரிவாக தொடங்கப்பட்டதுதான் எஸ்டிபிஐ கட்சி. இதன் தேசியத் தலைவரான ஃபைஸி மீது பணமோசடி புகார் எழுந்தது. இதையடுத்து, கடந்த பிப்ரவரி 28-ம் தேதி கேரளாவில் உள்ள ஃபைஸியின் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். பின்னர் அவரை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்த முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து, மார்ச் 4 ஆம் தேதி இரவு டெல்லி விமான நிலையத்தில் ஃபைஸி கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கையை எஸ்டிபிஐ உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் பழிவாங்கும் அரசியல் என விமர்சித்துள்ளன.

பைசி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை ஒருங்கிணைந்த மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் எஸ்‌.எஸ்.எ.கனி தலைமை வகித்தார். புறநகர் மாவட்ட பொதுச் செயலாளர் சிராஜ் வரவேற்றார். எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அகமது நக்வி, புறநகர் மாவட்ட தலைவர் கோட்டூர் பீர் மஸ்தான்,நெல்லை மாநகர் மாவட்ட துணை தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி,செயற்குழு உறுப்பினர் ரியாஸ் அகமது, இந்தியா யூனியன் முஸ்லிம் லீக் இலைஞர் அணி மாநில துணை தலைவர் கடாஃபி,நாம் தமிழர் கட்சி நிர்வாகி சத்யா, மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழக தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பெண்கள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, பாஜக அரசு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் எஸ்டிபிஐ கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.ஃபைஸியை விடுதலை செய்ய வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.


ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ஆரிப் பாட்ஷா நன்றி கூறினர்.