முன்னாள் ராணுவத்தினருக்கு தொழில் தொடங்க 1 கோடி கடன் : நெல்லை கலெக்டர் தகவல்

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வரின் காக்கும் கரங்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு, தொழில்முனைவோர் கருத்தரங்கு, முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் ஆகியவை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் சுகுமார் பேசியதாவது, 55 வயதுக்குட்பட்ட முன்னாள் படை வீரர்கள்,' முன்னாள் படை வீரர்களின் மறுமணம் செய்து கொள்ளாத மனைவிகள், அவர்களின் மகள்கள், 25 வயதுக்குட்பட்ட திருமணமகாத மகன்கள் ஆகியோருக்கு காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் தொழில் துவங்க ரூ.1 கோடி வரை கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கடனுக்கு 30 சதவிகிதம் முதலீட்டு மாநியமும் 3 சதவிகிதம் வட்டி மாநியமும் அரசால் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை முன்னாள் படை வீரர்கள் அவர்களின் குடும்பத்தினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் 'என்று கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் படை வீரர் நலத்துறை உதவி இயக்குநர் சங்கரசுப்ரமணியம், மாவட்ட தொழில் மைய மேலாளர் முருகன், வங்கி மேலாளர் கே.எம். குமார், தமிழ்நாடு சிறு மற்றும் நடுத்தர வளர்ச்சிக்கழக கணக்கு அலுவலர் பழனிவேல்ராஜன், மாவட்ட திறன் வளர்ச்சி பயிற்சி இயக்குனர் ஜார்ஜ், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் அந்தோணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.