களக்காடு முண்டந்துறையில் பறவைகள் கணக்கெடுப்பு : தன்னார்வலர்களுக்கு வனத்துறை அழைப்பு

இயற்கையை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் ஒவ்வொரு உயிரினங்களின் பங்களிப்பும் முக்கியமானது. இயற்கையை பாதுகாப்பதிலும், வளப்படுத்துவதிலும் பறவைகளின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனவே, தமிழகத்தில் இருக்கும் பறவைகளின் வகைகள், அவற்றின் வாழ்விட நிலை, மாறி வரும் பருவநிலையால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளும் பொருட்டு ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதத்தில் தமிழக வனத்துறையினால் பறவைகள் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்தில் எதிர்வரும் 8 மற்றம் 9 ஆம் தேதிகளில் ஆகிய நாட்களில் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட ஈரநிலங்கள் மற்றும் நீர்நிலை பகுதிகளிலும் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் வனப்பகுதியில் காணப்படும் நிலப்பரப்பு சார்ந்த பறவைகளை கணக்கெடுக்க முடிவெடுக்கப்பட்டுளளது.

பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் அம்பாசமுத்திரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பறவை ஆர்வலர்கள் மற்றும் இயற்கை சார்ந்த புகைப்பட கலைஞர்கள் கலந்து கொள்ள அம்பாசமுத்திரம் துணை இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார். பறவைகள் கணக்கெடுப்பின் போது சிறந்த பறவை ஆர்வலர்கள் மற்றும் சிறந்த புகைப்பட கலைஞர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள.

இந்த பணியில் பங்கேற்க விரும்புவர்கள் 04634 - 250594 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.