டாஸ்மாக்கில் தினமும் 10 கோடி கொள்ளை: ஆர்.பி உதயகுமார் ஆவேசப் பேச்சு

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ஜெயலலிதா பேரவை சார்பில் திண்ணை பிரசாரம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பேசியதாவது,

திமுக அரசு விளம்பர வெளிச்சத்தில் நடந்து கொண்டிருக்கிறது.திமுக அரசு ஒவ்வொரு நாளும் விழாக்களை நடத்துகிறது. விழாக்களை நடத்துவதை மட்டுமே கொள்கையாக வைத்துள்ளது. ஸ்டாலினின் தந்தை கருணாநிதி விஞ்ஞானபூர்வமாக ஊழல் செய்தார். அவரது பிள்ளைகளும் விஞ்ஞானப்பூர்வமாக ஊழல் செய்கிறார்கள். டாஸ்மாக்கில் ஒரு நாளுக்கு ஒரு கோடி பாட்டில் விற்கிறது. குடிகாரர் கூடுதலாக 10 ரூபாய் கொடுத்து வாங்குகிறார். அப்படி, குடிகாரர்களிடத்தில் இருந்து தினமும் 10 கோடி கொள்ளையடிக்கிறார்கள். இது ஸ்டாலின் வீட்டுக்குதான் போகிறது.

ஜெகத்ரட்சகன் நிறுவனத்தில் ஒரு லட்சம் பாட்டில் தயார் செய்கிறார்கள். டாஸ்மாக் லேபிள் ஒட்டப்படும் 50 ஆயிரம் பாட்டில்கள் மட்டும் டாஸ்மாக் கடைக்கு வந்து விடும். லேபிள் ஒட்டாத 50 ஆயிரம் பாட்டில்கள் டாஸ்மாக் சிஸ்டத்துக்குள் வராது. இந்த 50 ஆயிரம் பாட்டில்கள் எங்கே போகின்றன? இப்படி, டாஸ்மாக்கில் கொள்ளையோ கொள்ளை அடிக்கிறார்கள். இதை தெரிந்து கொண்டுதான் டாஸ்மாக் அலுவலகத்தில் துருவி துருவி சோதனை நடத்தினார்கள். 525 நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை தமிழக மக்களுக்கு கொடுத்துவிட்டு திருநெல்வேலி அல்வா கொடுக்கிறது திமுக அரசு . சிறுமி முதல் பாட்டி முதல் பாதுகாப்பு இல்லை. பாலியல் கொடுமை தினமும் நடக்கிறது. தமிழக மக்களுக்கு துரோகம் இழைக்கும் இந்த திமுக அரசு நீக்கப்பட வேண்டும். மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக வந்தால்தான் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.