எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நெல்லையில் இன்று (மார்ச் 7) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது,
' ஒன்றிய அரசின் பழிவாங்கும் அரசியல் நடவடிக்கையாக, எஸ்டிபிஐ கட்சியின் தேசியத் தலைவர் எம்.கே.பைஸியை டெல்லியில் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இந்த நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பதியப்பட்ட வழக்கில், அவர் கடந்த ஓராண்டாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி வந்தார். வழக்கில் இருந்து விடுதலை பெறுவதற்காக நீதிமன்றத்தில் ஆஜராக டெல்லிக்கு சென்றபோது அவர் கைது செய்யப்பட்டார். போலியான குற்றச்சாட்டாக இருந்தாலும், சட்டத்தின் மீதும், நீதிமன்றத்தின் மீதும் நம்பிக்கை வைத்து அவர் வழக்கில் ஆஜராகி வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரசியல் காரணங்களுக்காக மட்டுமே எஸ்டிபிஐ தேசிய தலைவர் பைஸி கைது செய்யப்பட்டுள்ளார். நாடு முழுவதும் வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிராக மிகப்பெரும் அளவில் எஸ்டிபிஐ கட்சி முன்னெடுத்துவரும் மக்கள் எழுச்சி போராட்டங்கள் ஒன்றிய அரசை நிலைகுலையச் செய்துள்ளதே இந்த கைது நடவடிக்கைக்கு காரணம்.
ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன், டெல்லி முன்னாள் முதலமைச்சர் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களுக்கும் இதுபோன்ற நெருக்கடியை அமலாக்கத்துறையை பயன்படுத்தி மத்திய அரசு கொடுத்து வந்தது. இதன் ஒரு பகுதியாகவே எஸ்டிபிஐ கட்சி மீதான இந்த நடவடிக்கைகளும் அமைந்துள்ளன.
தேர்தல் பத்திரம் என்கிற மோசடி சட்டம் மூலமாக பல ஆயிரம் கோடி ரூபாய் கருப்பு பணத்தை நன்கொடையாக பெற்றுவிட்டு, அதுகுறித்த விவரங்களை உச்ச நீதிமன்றத்தில் கூட தெரிவிக்க முன்வராத பாஜக அரசு, தன்னுடைய ஏவல் துறையின் மூலம் இதுபோன்ற அடக்குமுறைகளை கையாள்வது அரசியல் ஒடுக்குமுறை சர்வாதிகார நடவடிக்கையாகும். வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக, கேரளாவைப் போன்று தமிழ்நாடு சட்டமன்றத்திலும் அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
கட்டாய மும்மொழி திட்டம் உள்ளிட்ட கொள்கைகள் அடங்கிய புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத வரை தமிழ் நாட்டிற்கு கல்வி நிதி வழங்க முடியாது என மத்திய அரசு கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. இந்த அணுகுமுறை கூட்டாட்சி அமைப்பு மற்றும் கல்வியில் தங்கள் சொந்த மாநில நலனை முன்னிறுத்தி முடிவுகளை எடுப்பதற்கான மாநிலங்களின் சுயாட்சி பற்றிய கேள்விகளையும் எழுப்புகிறது. தமிழ் நாட்டில் பாஜக தவிர்த்து அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரண்டு மாநிலத்தின் நலன் கருதி, தாய்மொழி தமிழை பாதுகாக்கவும் இருமொழிக் கொள்கையே தொடர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்திப்பின் போது எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி, நெல்லை மண்டல தலைவர் பைஸல் அகமது, நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.எ.கனி, நெல்லை புறநகர் மாவட்ட தலைவர் பீர் மஸ்தான் மற்றும் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.