நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது, மும்மொழி கொள்கை குறித்து, மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் , தமிழர்களையும் , தமிழக எம்.பி.,க்கள் நாகரிகமற்றவர்கள் என்று கூறினார். மத்திய அமைச்சரின் கருத்துக்கு திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனால், தர்மேந்திர பிரதானை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.
நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள வி.கே.புரம் நகர தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி சார்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவப் படத்தை தீ வைத்து எரித்தும், செருப்பை கொண்டு அடித்தும் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து, தர்மேந்திர பிரதான் உருவபொம்மையை தி.மு.க.,வினர் பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழகம் கல்வியில் முன்னேறி கொண்டு இருக்கிறது. அதை நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு மறைமுகமாக மும்மொழி கொள்கையை திணிக்கின்றனர். தமிழகத்தில் எப்போதும் இரு மொழி கொள்கை மட்டும்தான் . தமிழ் வாழ்க.. தமிழ் வாழ்க என கோஷங்களை திமுகவினர் எழுப்பினர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.