திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு ஓட்டுனர் தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பட்டம் முடிந்த பிறகு, சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜாகீர் உசேன் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது, ' திருநெல்வேலி மண்டலத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் சொந்த பயன்பாட்டுக்காக வாங்கப்பட்ட வாகனங்களை பலர் வாடகைக்கு விடுகின்றனர். பல்வேறு அரசு அலுவலகங்களிலும் சொந்த பயன்பாட்டு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து புகார் அளித்தாலும் வட்டார போக்குவரத்து துறை அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. இனி புகார் அளிக்கப்பட்டால் வாகனத்தின் உரிமையாளரை முறையாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் .
கேரள பதிவு எண் கொண்ட வாகனங்கள் அதிகளவில் கன்னியாகுமரி மற்றும் பல்வேறு இடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வாகனங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் . இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களை மரியாதை நடத்த வேண்டும். உரிய ஆதாரங்கள் இல்லாமல் ஆன்லைனில் அபராதங்கள் விதிக்கக்கூடாது .
இவ்வாறு அவர் கூறினார்.