திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் இருந்து ஆயுதப்படை மைதானம் வழியாக பாளையங்கோட்டை வரை செல்லும் சாலை இரண்டு புறமும் ஒன்றரை மீட்டர்களுக்கு அகலப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதேபோல , திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் பாளையங்கோட்டை முருகன் குறிச்சியில் இருந்து நீதிமன்றம் வரையிலும் சாலை அகலப்படுத்தும் பணியும் நடைபெறுகிறது. இதன் காரணமாக , சாலையின் இருபுறமும் நன்றாக வளர்ந்து செழித்து நிழல் தரும் மரங்கள் நெடுஞ்சாலை துறையால் வெட்டப்படுகிறது. மரங்கள் வெட்டப்படுததை கண்டு, சமூக ஆர்வலர்கள் வருத்த தெரிவித்துள்ளனர்.
சாலை அகலப்படுத்தப்படுவதால் முறையாக அனுமதி பெற்று இந்த மரங்கள் அகற்றப்படுவதாகவும், நீதிமன்ற ஆணைகளின்படி வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக பல மடங்கு புதிய மரக்கன்றுகளை சாலை விரிவாக்க பணிகள் முடிந்தவுடன் நடப்படும் எனவும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டு காலமாக நிழல் தரும் மழை பெய்ய காரணமாக இருக்கும் மரங்கள் வெட்டப்படுவது திருநெல்வேலி மக்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நன்றாக செழித்து வளர்ந்த மரங்களை அப்படியே பெயர்த்து வேறு ஒரு இடத்தில் கொண்டு நடும் தொழில்நுட்பம் இப்போது உள்ளது. எனவே மரங்களை வெட்டாமல் அப்படியே பெயர்த்து வேறு இடத்தில் நட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.