நெல்லை நீதிமன்றத்தில் வாதாடிக்கொண்டிருந்த போதே மாரடைப்பால் வக்கீல் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை, தச்சநல்லூர், மேலக்கரையைச் சேர்ந்தவர் தங்கராஜ் (40). வக்கீலான இவர் நேற்று வழக்கு ஒன்றில் நெல்லை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வதாடிக்கொண்டிருந்தார்.
அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். சக வக்கீல்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். டாக்டர்கள் அவர் மாரடைப்பால் இறந்ததாக தெரிவித்தனர்.
இதுபோல் தச்சநல்லூர் அழகநேரி, தங்கம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பெயிண்டர் பாலகிருஷ்ணன் (44) என்பவர் வீட்டில் இருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த இரு சம்பவங்களும் நெல்லையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.