குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை இல்லாத இதய சிகிச்சை: நெல்லை அரசு மருத்துவமனை சாதனை

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு, காதுகேட்கும் திறன், பார்வை திறன் , இதய குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறிந்து, தீர்வு காண மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் பிறந்த குழந்தைகள் முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கு கண்புரை, காதுகேளாமை,அன்ன பிளவு, இதய நோய், முதுகுதண்டுவட வீக்கம், முன்கால் எலும்பு வளைவு, குடல் இறக்கம் போன்ற நோய்கள் கண்டறியப்படுகிறது. மேலும்,ஆட்டிசம் குறைபாடு, கற்றல் குறைபாடுகளும் கண்டறியப்படுகிறது.

பெரிய அளவில் இதய பாதிப்புள்ள குழந்தைகளுக்கு முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது. கடந்த இரு ஆண்டுகளில் 151 குழந்தைகளுக்கு இதய சிகிச்சையும் 31 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சையே இல்லாமல் நவீன கருவி பொருத்தப்பட்டு இதய நோய் குணப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகமான குழந்தைகளுக்கு நவீன இதய சிசிச்சை செய்வதில் நெல்லை அரசு மருத்துவமனை முதலிடத்தில் உள்ளது. அந்த வகையில், நவீன முறையில் இங்கு இதய சிகிச்சை பெற்ற குழந்தைகளை மாவட்ட ஆட்சியர் இரா.குமார் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, டீன் ரேவதி பாலன், கண்காணிப்பாளர் டாக்டர் பாலசுப்ரமணியம் மற்றும் மருத்துவர்கள் ரவி எட்வின், கிருஷ்ணமூர்த்தி, சுப்பையா ஸ்ரீராம், சுந்தர்ராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.