நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ள துலுக்கர்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடப்பு கல்வி ஆண்டில் சுமார் 120 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். 2025 - 26 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்காக வட்டார கல்வி அலுவலர் சுடலைமணி மேற்பார்வையில் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பேரணி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று( மார்ச் 15 )புதிதாக 1ம் வகுப்பு சேர்வதற்காக 15 மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோருடன் சீர்வரிசை பொருட்களாக பழங்கள், இனிப்பு வகைகள் உள்ளிட்டவைகளோடு வந்திருந்தனர் அவர்களை பள்ளி நுழைவு வாயிலில் ஆனைகுளம் ஊராட்சி மன்ற தலைவர் அசன் மைதீன், பள்ளி ஆசிரியர்கள் ரோஜாப்பூ கன்றுகள் கொடுத்து இன்முகத்தோடு வரவேற்றனர்.
மாணவர்கள் சிலம்பம் சுற்றி வகுப்பறைக்கு பெற்றோர் மற்றும் குழந்தைகளை அழைத்துச் சென்றனர் . தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளியிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள், கல்வி கற்கும் முறைகள் மாறியிருப்பது குறித்துமு பெற்றோருக்கு ஆசிரியர்கள் விளக்கி கூறினர். இதனையடுத்து புதிய மாணவ மாணவிகளுக்கு வித்யாரம்பம் சடங்கான பச்சரிசியில் 'அ' எழுத்து எழுதப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயபால் சுப்பிரமணியன்,ஜமாத் தலைவர் முகமது ஹக், பள்ளியின் மேலாண்மை குழு தலைவி ரஹ்மத் , ஆசிரியைகள் ஜாய்ஸ், ஜென்சி அந்தோணி கிருபா ஜெப தீபா, ரமலா,இல்லம் தேடி வரும் கல்வி குழு உறுப்பினர் மும்தாஜ் பேகம் , பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள்,முன்னாள் மாணவர் முஹம்மது ஒயிஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.