கள் ஏன் நல்லது? நெல்லையில் கள் இயக்க நல்லசாமி விளக்கம்

கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நெல்லைக்கு வந்திருந்தார். அப்போது, அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,

"இந்திய அரசியலமைப்பு சட்டம் கொடுத்துள்ள உணவு தேடும் உரிமை மற்றும் உலகளாவிய நடைமுறை என்ற அடிப்படையில் கள் இறக்கி சந்தைப்படுத்தி வருகின்றனர். இவர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கூடாது. அரசியலமைப்பு சட்டத்தை மதித்து, கள் இறக்க விதித்துள்ள தடையை நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரில் அறிவிக்க வேண்டும். இந்த அறிவிப்பு தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றும்.


தமிழ்நாட்டில் 8 கோடி மக்கள் கள்ளுக்கு ஆதரவாக இருக்கின்றனர். பனை, தென்னை, ஈச்ச மரங்கள் இருந்தால் பதநீர், கள் இறக்கி குடிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும். அதேநேரத்தில் கலப்படம் போன்ற தவறுகள் நடந்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பனை மரங்களுக்கு நீர் பாய்ச்ச வேண்டாம். உரம் வேண்டாம். பூச்சிக்கொல்லி தேவையில்லை. அந்த அளவுக்கு தானாகவே வளரக்கூடியது. எனவே , பனை மரத்திலிருந்து கிடைக்கும் கள், நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்ததாக இருக்கிறது. பனை மரத்திலிருந்து டெட்ரா பேக் மற்றும் பாட்டில்களில் அடைத்து விற்கும் போது அதன் மூலம் தமிழ்நாடு அரசுக்கு பெரிய அளவில் வருவாய் கிடைக்கும். இந்தியாவில் 8 கோடி பனைமரங்களில் தமிழ்நாட்டில் 5 கோடி பனை மரங்கள் உள்ளது. எனவே பனை மரத்திலிருந்து கிடைக்கும் பானங்கள் மூலம் தமிழ்நாடு அரசுக்கு பெரிய வருவாய் கிடைக்கும். கள் இறக்கும் மக்களின் வாழ்க்கைத்தரமும் உயரும்.

அயல்நாட்டு மது வகைகள் மற்றும் இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மது பானங்கள் உடல் நலனுக்கு உகந்ததல்ல. சித்த மருத்துவத்திலேயே மூலப்பொருளாக கள் இருந்துள்ளது.
கொரோனா காலத்தில் கேரளாவில் மதுக்கடைகள் மூடப்பட்ட போதும், கள்ளுக்கடைகள் மூடப்படவில்லை. எனவே கள் இறக்க தடையை தமிழ்நாடு அரசு நீக்க வேண்டும்" என்று தெரிவித்ள்ளார். பேட்டியின் போது பனை தொழிலாளர் சங்க மாநில தலைவர் ஸ்டீபன், செயலாளர் தூத்துக்குடி ராயப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.