மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் சொன்ன கதை

நெல்லை அரசு சட்டக் கல்லூரியில் மாநில அளவிலான தமிழ் மாதிரி நீதிமன்ற போட்டியின் நிறைவு விழா நேற்று நடந்தது. சட்டக் கல்வி இயக்ககம் வழிகாட்டுதலின் படி 3 நாட்கள் நடந்த இந்த போட்டியில் 14 அரசு சட்டக்கல்லூரிகள், 12 தனியார் சட்டக் கல்லூரிகள் என 26 சட்டக்கல்லூரிகள் பங்கேற்றன. ஒரு அணிக்கு 3 பேர் வீதம் 78 பேர் போட்டியில் பங்கேற்றனர்.

தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சாய்சரவணன், நெல்லை மாவட்ட குற்றவியல் நடுவர் விஜயராஜ்குமார், வக்கீல் சங்க தலைவர் ராஜேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நெல்லை அரசு சட்டக்கல்லூரி முதல்வர் ராமபிரான் ரஞ்சித்சிங் தலைமை தாங்கி பேசினார்.நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக

சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி சுவாமிநாதன் கலந்து கொண்டார்.

அவர் பேசியதாவது, 'நான் அறிந்த ஒரு வழக்கைப் பற்றிக் கூறி பேச ஆரம்பிக்கிறேன். ரோனால்ட் என்பவன் 10வது மாடி கட்டடத்தில் இருந்து விழுந்ததில் இறந்து விடுகிறான். அந்த கட்டிடத்தில் சேப்டி நெட் போடப்பட்டிருந்தும் ரோனால்ட் எப்படி இறந்தான் ? என போலீசார் விசாரித்த போது அவன் குண்டடி பட்டு இறந்தது தெரிய வந்தது. அந்த குண்டு எங்கிருந்து வந்தது என போலீசார் அறிய முயன்ற போது, ரோனால்ட் விழுந்த மாடியின் கீழ் தளத்தில் தம்பதி சண்டை போட்டுள்ளனர். அப்போது, கணவர் சுட்டதில் ரோனால்ட் மீது குண்டடி தவறுதலாக பட்டதில் இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக அந்த கணவரை பிடித்து போலீசார் விசாரித்த போது ,என் மனைவியை அடிக்கடி மிரட்டுவேன். ஆனால், எனது துப்பாக்கியில் புல்லட் இருக்காது. எப்படி சுட்டது எனத் தெரியவில்லை என்றார். போலீசாருக்கு மீண்டும் குழப்பம். அந்த வீட்டின் பணிப் பெண்ணிடம் போலீசார் விசாரித்த போது, அந்த தம்பதியின் மகன் செலவுக்கு பணம் கேட்டான். அவனது தாய் கொடுக்க மறுத்து விட்டார். இதனால், தாயை கொலை செய்ய நினைத்துள்ளான். தொடர்ந்து, தந்தைக்கு தெரியாமல் துப்பாக்கியில் தோட்டாக்களை லோட் செய்துள்ளான். இது தெரியாமல், அவர் சுடவே, ரோனால்ட் மீது குண்டு பாய்ந்துள்ளது. இது அமெரிக்காவில் உண்மையில் நடந்த சம்பவம்.


எதையுமே மேலாட்டமாக தெரிந்து வைத்தால் உண்மை புலப்படாமல் போய்விடும். நுணுக்கமாக அறிய வேண்டும். இப்போது நடந்து முடிந்த தமிழ் மாதிரி நீதிமன்ற போட்டியும் கூட உங்களது எதிர்காலத்திற்கான பயிற்சியாக நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். சமீபத்தில் 14 வயது சிறுமி வாழப்பிடிக்கவில்லை என கடிதம் எழுதி வைத்து விட்டு சிறுமி ஒருவர் தற்கொலை செய்து வழக்கு என்னிடம் வந்தது. உடற்கூறாய்வு செய்யப்பட்டபோது , சிறுமி கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. அதன் பிறகு டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், சிறுமியை கர்ப்பமக்கிய சரவணன் என்ற கொத்தனாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கினேன்.

இந்த விஷயத்தை இங்கு சொல்ல காரணம் டிஎன்ஏ, ஏஐ என தொழில்நுட்பங்கள் எல்லா துறைகளிலும் வளர்ந்து கொண்டே வருகிறது. எதிர்கால வக்கீல்களான நீங்கள் அனைத்தையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். உங்களிடம் வேகம் இருக்கிறது. ஆனால், மேலோட்டமாக வாசிக்க கூடாது. எதிர்கால வக்கீல்களான நீங்கள் ஆழமாக படிக்க வேண்டும். புத்தகங்கள் படியுங்கள். நானும் உங்களைப்போல் மாதிரி நீதிமன்ற போட்டிகளில் பங்கேற்று இருக்கிறேன். 3வது சுற்றிலேயே வெளியேறி இருக்கிறேன். அப்போது, வெற்றி பெற்றவர்கள் இப்போது சிறந்த வக்கீல்களாக உள்ளனர். நான் இப்போது நீதிபதியாக இருக்கிறேன். அதனால் , போட்டியில் தோற்பது ஒரு விஷயமே அல்ல. பங்குபெறுவதுதான் முக்கியம். வென்றால் சிறந்த வக்கீல். தோற்றால் என்னைப்போல் சிறந்த நீதிபதியாக வரலாம்.

தமிழில் மாதிரி நீதிமன்ற போட்டி என்றவுடன் 1953ம் ஆண்டில் தமிழில் தீர்ப்பு வெளியானதாக சமீபத்தில் ஒருவர் கூறியது நினைவுக்கு வருகிறது. அப்போது ,இதற்கு வாய்ப்பில்லை என்று நான் கூறினேன். காரணம் 1975 ஆம் ஆண்டு ராமநாதபுரத்தில் முனிசிப் ஒருவர் தமிழில் எழுதிய தீர்ப்பு செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தமிழ் இதுவரை உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக இல்லை. ஆனால், விரைவில் தமிழ் நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக வரும் என்பதற்கு அடையாளமாக இந்த தமிழ் மாதிரி நீதிமன்ற போட்டியை முன்மாதிரியாக பார்க்கிறேன்.'

இவ்வாறு அவர் பேசினார்.