நெல்லை : காலையில் தந்தையிடம் ஆசி வாங்கி தேர்வுக்கு சென்ற மகள்...மதியத்தில் சடலமாக கண்டு துடித்த பரிதாபம்

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகேயுள்ள கொக்கிரகுளத்தை சேர்ந்த கஜேந்திரன் என்பவர் தனது வீட்டின் முன்பாக கூடுதலாக ஒரு அறை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். கட்டுமான பணியில் இன்று காலை தண்ணீர் நனைக்கும் பணியில் அவரது மகன் சஞ்சய் என்ற வேலாயுதம் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, திடீரென மின்சாரம் பாய்ந்ததில் வேலாயுதம் துடி துடித்துக் கொண்டிருந்தார். இதைக் கண்ட அருகிலிருந்த ரவி என்ற பாலசுப்பிரமணியன் அவரை காப்பாற்ற ஓடி சென்றார். அப்போது, ரவியையும் மின்சாரம் தாக்கியது. இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து வீட்டின் மின் இணைப்பை துண்டித்தனர். ஆனால் , அதற்குள் வேலாயுதமும் ரவியும் உயிரிழந்து விட்டனர். தொடர்ந்து, இடத்திற்கு வந்த பாளையங்கோட்டை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மின்சாரம் தாக்கி உயிரிழந்த ரவியின் இரண்டாவது மகள் நேத்ரா மகாலட்சுமி இன்று காலை பன்னிரண்டாம் வகுப்பு தேர்வெழுத பள்ளிக்குச் சென்றிருந்தார். பரிட்சை முடிந்து வீடு திரும்பியபோது தந்தை உயிரிழந்து கிடந்ததை கண்டு துடிதுடித்து கதறி அழுதது அங்கிருந்தவர்களை கலங்கடித்தது.

ரவிக்கு சித்ரா காந்திமதி என்ற மனநலம் பாதித்த மூத்த மகளும் மற்றும் ஒரு மகனும் உள்ளளனர். வேலாயுதத்தை காப்பாற்ற சென்று பலியான ரவியின் தியாகம் அனைவரையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. இதனால், அக்கம்பக்கத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.