
திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ ஜாகிர் உசேன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தொலைக்காட்சி ஒன்றில் திருநெல்வேலி புறநகரில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 211 பேர் கொலை செய்யப்பட்டதாகவும் திருநெல்வேலி மாவட்டம் மற்றும் மாநகரத்தில் 392 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது .
கைதானவர்களில் சிறார்கள் 60 பேர் என்றும் கூறப்பட்டிருந்தது. கொலை வழக்குகளில் 1045 பேர் கைதாகியுள்ளனர் என்றும் பெருமாள்புரம், பாளையங்கோட்டை, பேட்டை, மேலப்பாளையம், தச்சநல்லூர் பகுதிகளில் சாதி ரீதியான கொலைகள் அதிகம் நடப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து திருநெல்வேலி எஸ்.பி சிலம்பரசன் சில விளக்கங்களை அளித்துள்ளார் . அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்
' திருநெல்வேலி மாநகரம் மற்றும் மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் கொலை குற்றவாளிகளின் நடவடிக்கைகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் இல்லாமல் அமைதியான சூழல் நிலவ காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் நெல்லை மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளது. மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ளும் நபர்கள் காவல்துறையின் கண்காணிப்பில் இருக்கின்றனர்.
திருநெல்வேலி மாவட்ட காவல் எல்லையில் கடந்த 2020-ம் ஆண்டு 40 கொலைகளும், 2021 ஆம் ஆண்டு 52 கொலைகளும், 2022 ஆம் ஆண்டு 44 கொலைகளும், 2023 ஆம் ஆண்டு 44 கொலைகளும், 2024 ஆம் ஆண்டு 35 கொலைகளும், 2025-ம் ஆண்டு 7 கொலைகளும் நடந்துள்ளன.
நெல்லை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு 14 கொலைகளும், 2021 ஆம் ஆண்டு 9 கொலைகளும், 2022 ஆம் ஆண்டு 18 கொலைகளும், 2023 ஆம் ஆண்டு 17 கொலைகளும், 2024 ஆம் ஆண்டு 17 கொலைகளும், 2025-ம் ஆண்டு 4 கொலைகளும் நடந்துள்ளன.
காவல்துறையின் துரித நடவடிக்கையால் ஒவ்வொரு ஆண்டும் கொலை குற்றங்கள் குறைந்து வருகிறது. மேலும் 11 பேரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளோம். கடும் குற்றங்களில் ஈடுபட்ட நபர்களில் 1306 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.
திருநெல்வேலி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் தற்போது கொலை போன்ற முக்கிய குற்றங்களை குறைக்கும் நோக்கத்தோடு, முக்கிய வழக்குகளில் தனிக் கவனம் செலுத்தி விரைவில் தண்டனை பெற கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
காவல்துறையின் துரித நடவடிக்கையால் 2025 ஆம் வருடத்தில் மட்டும் இதுவரை 11 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களில் ஒருவருக்கு மரண தண்டனையும் 37 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதில் 10 பேர் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ஆவார்கள்.
மேலும் ஒவ்வொரு சரித்திர பதிவேடு குற்றவாளிகளையும் கண்காணிக்க, ஒரு காவலரை நியமித்துள்ளோம். சில ஊடகங்களில் கொலை நகரமாக மாறும் நெல்லை என மிகைப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.