
திருநெல்வேலி டவுன் தடிவீரன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் . காவல்துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று அந்த பகுதியிலுள்ள மசூதியில் முத்தவல்லியாக பணிபுரிந்து வந்தார் .இவருக்கும் தௌபிக் என்ற கிருஷ்னமூர்த்திக்கும் வக்புக்கு சொந்தமான 36 சென்ட் இடம் தொடர்பாக பிரச்சனை இருந்துள்ளது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், டவுண் தடிவீரன் கோவில் தெருவில் உள்ள மசூதி ஒன்றில் கடந்த 18 ஆம் தேதி தொழுகையை முடித்துவிட்டு வெளியே வந்த ஜாகிர் உசேனை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்தனர். தமிழகத்தில் இந்த கொலை சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கொலை தொடர்பாக தௌபிக் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் வக்பு வாரிய தலைவருமான நவாஸ் கனி கொலை செய்யப்பட்ட ஜாகிர் உசேனின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், செய்தியாளர்களிடத்தில் அவர் பேசியதாவது,
' ஜாகிர் உசைன் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற முத்த வல்லியாக இருந்தார். வக்பு வாரியத்துக்கு சொந்தமான. 36 சென்ட் இடத்தை தௌபிக் வாடகைக்கு எடுத்துள்ளார் . பின்னர், அதற்கு போலி ஆவணங்களை தயாரித்து தனக்கு சொந்தம் என உரிமை கொண்டாடியுள்ளார். அதனருகிலுள்ள இரண்டரை சென்ட் இடத்தையும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
அந்த நிலத்தை ஜாகிர் உசேன் மீட்டுள்ளார். அப்போது, தௌபிக், ஜாகிர் உசேனிடத்தில் தகராறு செய்துள்ளார். தொடர்ந்து, 36 சென்ட் நிலைத்தையும் அவரிடத்தில் இருந்து மீட்க ஜாகிர் உசேன் போராடிக் கொண்டிருந்தார். இதன் காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை தொடர்பாக சட்டப்பேரையில் கவனம் இருப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. முதலமைச்சர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். காவல்துறை ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார் .
கைது செய்யப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் . குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் . ஏற்கனவே , ஆக்கிரமிப்பிலுள்ள சொத்துக்களை மீட்க வேண்டும் என்றும் ஜாகிர் உசேனின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். அந்த நிலங்களை மீட்கும் பணியில் தொடர்ந்து, வக்பு வாரியம் ஈடுபடும். கைது செய்யப்பட்ட தௌபிக்கின் மனைவி பெயரில் எந்த நிலமும் கிடையாது. வாடகைக்கு எடுத்து போலி ஆவணங்கள் தயாரித்துள்ளனர். '
இவ்வாறு அவர் கூறினார்.