
திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கரடிகள் காணப்படுவது வழக்கமானது. ஆனால், கடந்த 19 ஆம் தேதி இரவு, அம்பாசமுத்திரம் அருகே உள்ள பாப்பாங்குளம் பகுதியில் கரடி உலா வந்துள்ளது.
நெசவாளர் காலனி அருகே உள்ள கோல்டன் நகர் மற்றும் பொன்மா நகர் பகுதிகளில் கரடி சுற்றித்திரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வீடுகளுக்குள் புகுந்து ஏதாவது சாப்பிட கிடைக்குமா ? என்றும் முயன்றுள்ளது. அங்குள்ள, நெசவாளர் காலனி வயல் ஓரத்தில் அமைந்துள்ள அக்னி சாஸ்தா கோவிலில் கரடி வந்து சென்ற காட்சி சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.
கரடி நடமாட்டம் குறித்து அறிந்த பொதுமக்கள் அச்சத்தில் வீடுகளில் இருந்து வெளியே வராமல் இருந்தனர். பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கரடியை பிடிக்க வனத்துறையினருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, கரடியை கூண்டு வைத்து பாதுகாப்பாக பிடிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள பரிந்துரை செய்துள்ளனர். பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.