
திருநெல்வேலி , பாளையங்கோட்டை தியாகராஜ நகர் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே கேட், அப்பகுதி மக்களின் முக்கிய போக்குவரத்து பாதையாக உள்ளது. இந்த ரயில்வே கேட் தினசரி சுமார் 13 முறை திறந்து மூடப்படுவதால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்லும் மக்கள் கடும் சிரமத்தை அனுபவித்து வந்தனர்.
இந்த பிரச்சினையை தீர்க்கும் வகையில், 2016 ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தியாகராஜ நகர் ரயில்வே மேம்பாலத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது. கடந்த 2017 ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பாலம் கட்டும் பணி துவங்கியது. எட்டு ஆண்டுகளாக கிடப்பில் இருந்த இந்தப் பணி, 2023 ஆம் ஆண்டில் மீண்டும் துவங்கி, மும்முரமாக நடைபெற்று, ரயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டது. மேம்பாலத்தின் கீழ் பகுதியிலும் மக்கள் வசிக்கும் பகுதி உள்ளது.
இதனால், மேம்பாலம் கட்டிய பிறகும் ரயில்வே கேட் மூடப்பட்டதால், பொதுமக்கள் அவதியடைந்தனர். 2024 ஆம் ஆண்டு மே மாதம் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் கேட் மூடப்பட்டது. இதனால், மக்கள் பாதிக்கப்பட்டனர்.எனவே, ரயில்வே தண்டவாளத்தின் கீழே சுரங்கப்பாதை அமைக்கப்படும் வரை, கேட்டை மீண்டும் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. மிக நெருக்கடியாக ஒரு பைக் மட்டுமே செல்லும் வகையில் பாதை அமைக்கப்பட்டது.
இதனால், மேம்பாலத்தை பயன்படுத்தாத இருசக்கர வாகனங்களில் வரும்போது கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. ரயில்வே கேட் திறந்தவுடன் ஒருவரை ஒருவரை முந்திக்கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர். இதனால், தினமும் அடிதடி ஏற்படாத குறைதான். ஒவ்வொரு முறையும் ரயில்வே கேட்ட திறந்து மூடப்படும் போதும் இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த பகுதியை கடக்க சிரமப்படுகிறார்கள்.
இதனால், சுரங்கப்பாதை அமைக்கும் வரை மேம்பாலத்துக்கு அடியில், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு ஆட்டோ செல்லும் வகையில் பாதை அமைத்தால் பயணிகளுக்கு வசதியாக இருக்கும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.